குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவராவிட்டால் ஈழத் தமிழர் குடியுரிமை பற்றி திமுக பேசுமா? சீமான் கேள்வி

சீமான்

  • News18
  • Last Updated :
  • Share this:
குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவராவிட்டால் ஈழ தமிழர் குடியுரிமை பற்றி திமுக பேசுமா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல்களில் கன்னியாகுமரி மாவட்டம் ராஜமக்கலம் ஒன்றியத்தில் வார்டு உறுப்பினர் பதவியை வென்று தேர்தலில் முதல் வெற்றியை பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி.

கட்சி ஆரம்பித்து பத்து ஆண்டுகளில் இது முதல் வெற்றியாகும். இவரை தவிர பஞ்சாயத்து அளவில் 100-க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளனர் என கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

'நான் ராகுல் காந்தி இல்லை'

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் பூந்தமல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அவர், "தேர்தலில் வெற்றி பெற்றால் தான் இருப்பேன். தோற்றால் இருக்க மாட்டேன் என கூற நான் ராகுல் காந்தி இல்லை" என கூறினார்.

தன் தம்பிகளுக்கு சில அறிவுரைகளையும் கூறினார். "பாலியல் குற்றச்சாட்டு என்று வந்தால் எந்த கொம்பனாக இருந்தாலும் கட்சியில் இடம் கிடையாது. நீக்கவேண்டும் என்று கூட எதிர்ப்பார்க்காதீர்கள். நீங்களே போய் விடுங்கள்.

'அனைத்தும் அறிந்தவன் யான்'

நம் கட்சியில் வேண்டியவன் வேண்டாதவன் என்று பார்ப்பதில்லை. வேலை செய்றவன் செய்யாதவன் என்று தான் பார்ப்போம்.கட்சியிலிருந்து ஒருவன் நீக்கப்பட்டால் அவர் செய்த வேலை மதிப்பீடு பொருத்தே அது அமையும். ஏதோ சென்னையில் ஒரு மூலையில் இருக்கிறான், இவனுக்கு எப்படி நாம் வேலை செய்வது தெரியும் என நினைக்காதீர்கள். சிவனை போல் அனைத்தும் தெரிந்தவன் யான்" என்றார்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு முதலில் வேட்பாளர்களை அறிவிக்க போவது நாம் தமிழர் கட்சியாக தான் இருக்க வேண்டும். இந்த மாத இறுதிக்குள் வேட்பாளர் பட்டியல் தயாராகி விடும் என கூறியுள்ளார் அவர். 117 ஆண்கள் , 117 பெண்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

'வேட்பாளர் தேர்வுக்கு ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பொறுப்பாளர் நியமிக்கப்படுவார்கள். ஒருவர் அந்த தொகுதியிலிருந்து. மற்றும் இருவர் வேறு தொகுதிகளிலிருந்து. அவர்கள் தரும் அறிக்கை பொருத்து வேட்பாளர் அறிவிக்கப்படுவார்கள்' என்றார் .

மேலும், "உங்களை ஒருவர் புகழும் போது காதை பொத்தி கொள்ளுங்கள். ஒருவர் இகழும் போது வாயை மூடிக் கொள்ளுங்கள். பிரச்னையே வராது" என்றார்.

'அண்ணாவுக்கு பாரத ரத்னா கிடைக்கக் கூடாது என நினைத்த திமுக'

தொடர்ந்து பேசிய அவர் திமுக மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார். "ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று கூறி நாடகமாடுகிறது திமுக.

குடியுரிமை சட்டத்தை பாஜக அரசு கொண்டு வரவில்லை என்றால், ஈழத் தமிழர்கள் குடியுரிமை பற்றி பேசியிருக்குமா திமுக?வேற ஏதாவது நாடகம் போடுங்கள்? பார்க்க சகிக்கவில்லை. ஈழ ரத்தம் எங்கள் ரத்தம். நாங்கள் ரத்தம் சிந்தும் போது எங்கு போனீர்கள்? மத்திய அரசில் 18 ஆண்டுகள் பங்கெடுத்த போதே திமுக குரல் கொடுத்திருக்கலாமே.

அண்ணாவுக்கு பாரத ரத்னா வேண்டும் என மத்திய அரசில் பங்கெடுத்த போதே கேட்டிருக்கலாமே? ஏன் கேட்கவில்லை. கேட்டால் உடனே கொடுத்துவிடுவார்கள் என்று தான் கலைஞர் கருணாநிதி அதை அப்போது கேட்கவில்லை.

'பகுத்தறிவு திலகங்கள்'

தேர்தல் வெற்றியை கொண்டு போய் கருணாநிதி சமாதியில் வைத்து வணங்குகிறார்கள் பகுத்தறிவு திலகங்கள். இதையே நான் பிரபாகரனுக்கு செய்தால் என்னை ஏளனமாக பேசினார்கள்.

'நாம் இந்துக்கள் அல்ல, வீர சைவர்கள்'

திருவள்ளுவர் குறளை சமஸ்கிருதத்தில் எழுதியிருந்தால் சமஸ்கிருதம் உலகப்புகழ் பெற்றிருக்கும் என பிரதமர் மோடி கூறுகிறார். வள்ளுவருக்கு முருகனுக்கும் பூணூல் போட துடிக்கிறார்கள். திறமையான ஒருவன் வேறு சாதியில் இருப்பதை பிராமணர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.  நாம் இந்துக்கள் அல்ல. வீர சைவர்கள் என கூறினார்.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published: