ஒன்றியம் என்பதை தாண்டி பாஜகவுக்கு எதிராக திமுக என்ன செய்துவிட்டது? சீமான் கேள்வி!

சீமான்

அறிஞர் அண்ணாவின் வழியில் நடத்துவதாகக் கூறும் திமுக, அண்ணாவின் உயிலென வர்ணிக்கப்படக்கூடிய மாநிலத்தன்னாட்சியை நிலைநாட்டத் தயங்குவது ஏன் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

 • Share this:
  ’ஒன்றியம்’ எனும் வார்த்தையைக்கூறியே ஒப்பேற்றிவிடலாம் என எண்ணாமல், மம்தா பானர்ஜியைப் போல உளமார, ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோன்மையை எதிர்க்க திமுக அரசு முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

  இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்  அதிமுகவின் தோளோறி பின்வாசல் வழியாக ஆட்சியை பிடிக்க துடிக்கும்  பாஜகவை முதன்மை எதிரியாக கட்டமைத்து ஆட்சியை  பிடித்த திமுக, இன்றைய பாஜக இட்ட பாதையில் செல்வதாகவும் பாஜகவை மென்மையானப் போக்கோடு அணுகுவதாகவும் விமர்சித்துள்ளார்.

  மேலும், நாட்டின் பன்முகத்தன்மையை முற்றாகச் சிதைத்தழித்து, கூட்டாட்சித் தத்துவத்தையும் குலைத்து, தேசிய இனங்களை, ‘இந்து’ எனும் மாய வலைக்குள் வீழ்த்திட முயலும் பாஜகவை வலிமைகொண்டு மூர்க்கமாக எதிர்த்து அரசியல் செய்யாது, பாஜக செய்யும் அரசியலுக்குள் கரைந்துபோகும் திமுகவின் செயல்பாடுகள் யாவும் வழமையான பிழைப்புவாதம் என்று கூறியுள்ள அவர், இந்திய அரசியலமைப்புச்சாசனத்தில் கூறப்பட்ட ‘ஒன்றியம்’ எனும் சொல்லைப் பயன்படுத்தியதைத் தாண்டி திமுக அரசு, பாஜகவை எதிர்த்து வீரியமாய்ச் செய்திட்ட அரசியலென்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பாஜகவின் தாய்க்கழகமான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கிளையான சேவா பாரதியானது சேவை அரசியல் எனும் பெயரில் மக்களிடையே ஊடுருவி, இந்துத்துவ வேர்ப்பரப்பலையும், பிரித்தாளும் அரசியலையும் செய்து வருவதாக தெரிவித்துள்ள சீமான்,  “மோடி அரசால் நிகழ்த்தப்பட்டு மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இசுலாமியர்களைப் பலிகொண்ட குஜராத் இனப்படுகொலை முதல் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட சாத்தான்குளம் படுகொலைவரை சேவா பாரதியின் பின்புலமுள்ளது என்பது தெரிந்தும், அதனை ஊடுருவ வழிவகைச் செய்வதன் அபாயத்தை உணர்ந்து கேரளத்தை ஆளும் கம்யூனிச அரசு அதற்கு முட்டுக்கட்டை போட்டிருப்பதறிந்தும், தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற கொரோனாவுக்கு எதிரான தன்னார்வ இயக்கங்களின் கலந்தாய்வுக்கூட்டத்தில் சேவா பாரதியை அழைத்தது ஏன்? அதன் பின்புலத்திலுள்ள அரசியலென்ன” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

  மேலும், “சேவா பாரதி நடத்திய நிகழ்வில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர் பெருமக்களும் பங்கேற்றுச் சிறப்பித்தது ஏன்? ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தோடு திமுகவுக்கு என்ன தொடர்பு? ‘ஆர்.எஸ்.எஸ்.ஸும் திராவிடர் கழகம் போல ஒரு சமூக அமைப்புதான்’ என ஐயா கருணாநிதி அவர்கள் கூறியது நினைவுக்கு வந்துவிட்டதோ? அதன் விளைவாகத்தான், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் வருகைக்கு திமுக அரசாங்கம் அவ்வளவு முதன்மைத்துவம் வழங்கியதா? உயரடுக்குப் பாதுகாப்பில் இருக்கும் எத்தனையோ பேர் வந்ததே தெரியாமல், தமிழகத்திற்கு வருகைப் புரிந்துவிட்டுத் திரும்பும்போது மோகன் பகவத்துக்கு மட்டும் இப்பேர்பட்ட சிறப்புச்சலுகை எதற்காக? சமூக வலைத்தளங்களில் உத்தரவுக்கடிதத்தின் நகல் வெளியாகி எதிர்ப்பினையும், கண்டனத்தினையும் எதிர்கொண்ட பிறகு, வேறு வழியின்றிதானே அரசியல் நெருக்கடி காரணமாக உத்தரவுக்கடிதம் அனுப்பிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது? இல்லாவிட்டால், சேவா பாரதியை சத்தமின்றித் தலைமைச்செயலகத்திற்கு அழைத்தது போல மோகன் பகவத்துக்கு எல்லா மரியாதையும் செய்தல்லவா அனுப்பியிருப்பார்கள்” என்றும் விமர்சித்துள்ளார்.

  இதையும் படிங்க: குடும்ப தலைவிக்கு ரூ.1000: புதிய ரேஷன் கார்டு பெற குவிந்த விண்ணப்பங்கள்!


  அதிகாரியைக் கண்துடைப்புக்கு நீக்கிவிட்டு, மோகன் பகவத்தின் வருகைக்கு எவ்விதக்குறையும் வைக்காதுதான் அரசு நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  சாலை வசதி, தெருவிளக்கு வசதி போன்றவை மக்களின் அத்தியாவசிய அடிப்படைத்தேவைகள். அதனைச் செய்வதற்குத்தான் வரிப் பிடித்தம் செய்யப்படுகிறது. மோகன் பகவத்தின் வருகை இல்லையென்றால், சாலைப்பராமரிப்பு செய்யப்பட்டிருக்காது; அதே குண்டு குழியுமான சாலையும், எரியாத தெருவிளக்குக்கம்பங்களும்தான் இருக்குமென்றால் அதென்ன சனநாயகம் என்று கூறியுள்ள சீமான்,  ஸ்டாலின் டெல்லிக்குச் சென்றால் இதேபோலச் சாலைகளைச் சீரமைத்து, தெருவிளக்குகளைப் பராமரித்து இவ்வளவு மரியாதையும், முன்னுரிமையும் வழங்கப்படுமா? தமிழக முதல்வர்கள் யாருக்காகவாவது டெல்லியில் அப்பேர்ப்பட்ட முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

  மேலும் படிக்க: அடுத்தடுத்த டெல்லி பயணம்: பிரதமரை சந்திக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ்!


  மோகன் பகவத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருவது ஏன் என்றும், ஆரியத்தை ஆதிமுதல் எதிர்த்து வரும் தமிழர் நிலத்தில் இவரை வரவேற்று உபசரிக்க என்ன அவசியம் வந்தது என்றும் குறிப்பிட்டுள்ள சீமான், அறிஞர் அண்ணாவின் வழியில் நடத்துவதாகக் கூறும் திமுக, அண்ணாவின் உயிலென வர்ணிக்கப்படக்கூடிய மாநிலத்தன்னாட்சியை நிலைநாட்டத் தயங்குவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

  நீட் தேர்வு, எழுவர் விடுதலை, கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட் ஆலை, காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கம், நியூட்ரினோ என தமிழகத்தின் முதன்மைச்சிக்கல்கள் யாவற்றிலும் பாஜக நினைப்பதே நடக்கிறதே அது எப்படி? இதுதான் பாஜகவை திமுக எதிர்க்கிற இலட்சணமா? இதுதான் மாநிலத்தன்னாட்சியை நிலைநாட்டும் அண்ணாவின் வழிவந்த ஆட்சியா என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

  இதையும் படிங்க: அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் பயில் நாளை முதல் விண்ணப்பம்: வழிமுறைகள் என்ன?


  மேலும், “ ‘ஒன்றியம்’ எனும் வார்த்தையைக்கூறியே, ஒப்பேற்றிவிடலாம் என எண்ணாமல், மேற்கு வங்கத்தை ஆளும் அம்மையார் மம்தா பானர்ஜியைப் போல உளமார ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோன்மையை எதிர்க்க முன்வர வேண்டும் எனவும், மோடி அரசின் நாசகாரத்திட்டங்களிலிருந்தும், சட்டங்களிலிருந்தும், தமிழ்நாட்டைப் பேணிக்காத்து மாநிலத்தின் மண்ணுரிமையையும், தன்னுரிமையையும் நிலைநிறுத்த வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
  Published by:Murugesh M
  First published: