தமிழக மீனவர்கள் மீதான இந்திய பெருநாடு வெட்கமின்றி வேடிக்கைப் பார்ப்பது தமிழ் உணர்வுகளைச் சீண்டுகிறது - சீமான் காட்டம்

தமிழக மீனவர்கள் மீதான இந்திய பெருநாடு வெட்கமின்றி வேடிக்கைப் பார்ப்பது தமிழ் உணர்வுகளைச் சீண்டுகிறது - சீமான் காட்டம்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

தமிழக மீனவர்களின் மீதான இத்தாக்குதலை` இந்திய பெருநாடு வெட்கமின்றி வேடிக்கைப் பார்ப்பது எட்டுகோடி தமிழர்களின் உள்ளத்து உணர்வுகளைச் சீண்டிப் பார்ப்பதாக உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

 • Share this:
  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில், ‘தமிழக மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படையினர் அத்துமீறிக் கைது செய்து சிறைப்படுத்தியிருப்பது அம்மீனவர்களின் குடும்பத்தினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைதுசெய்யப்படுவதும், தாக்கப்படுவதும், உடைமைகள் பறிக்கப்படுவதும், சுட்டுக்கொலை செய்யப்படுவதுமெனச் சிங்களக்காடையர் கூட்டத்தின் கொடுங்கோல் போக்குகளும், அட்டூழியங்களும் இன்றுவரை தொடர்ந்து வருவது ஆளும் அரசுகளின் கையாலாகத்தனத்தையே காட்டுகிறது.

  கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த இராமேஸ்வரம், தங்கச்சி மடம், பாம்பனைச் சேர்ந்த மீனவர்கள் 29 பேரை எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்திருப்பதோடு மட்டுமல்லாது, அவர்களது 5 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இதுவரை எத்தனையோ இலங்கை மீனவர்கள் எல்லைத்தாண்டி இந்திய எல்லைக்குள் வந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக்கூட இந்தியக் கடற்படையினர் தாக்கியதாகவோ, தண்டித்ததாகவோ, இழிவாக நடத்தியதாகவோ செய்தியில்லை. ஆனால், தமிழக மீனவர்கள் மீது சிங்கள இராணுவம் நடத்தி வரும் தொடர் வன்முறைத் தாக்குதல்களும், தமிழர் படகுகளைப் பறித்து அரசுடைமையாக்கிக் கொள்ளும் அநீதியும், வலையறுப்பு நிகழ்வுகளும், மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை நடுக்கடலிலே வைத்து அடிப்பது, உதைப்பது, நிர்வாணப்படுத்துவது, கடலுக்குள் தள்ளி விடுவது, ஆயுதத்தைக் கொண்டு துன்புறுத்துவது, அவர்களது உடைமைகளைப் பறித்துக்கொள்வது, மீன்களைக் கடலிலே வீசியெறிவது, வலைகளை அறுத்தெறிவது, படகுகளைச் சேதப்படுத்துவது, மீனவர்களைச் சிறைப்பிடிப்பது, துப்பாக்கிச்சூடு நடத்துவது என சிங்கள இராணுவம் அரங்கேற்றிவரும் கொடுமைகளும் சொல்லி மாளக்கூடியதல்ல. சிங்களப் பேரினவாத அரசு ஈவிரக்கமற்று தமிழக மீனவர்கள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தி, சொல்லொணாத் துயரங்களுக்கு அவர்களை ஆட்படுத்தி மிகப்பெரும் வன்முறையிலும், அத்துமீறல்களிலும் ஈடுபட்டு வருவது தமிழர்கள் மீதான வன்மத்தின் வெளிப்பாடேயாகும்.

  இலங்கை கடற்படையினரின் தாக்குதலின் மூலம் இதுவரை பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் உடல் உறுப்புகளைச் சிதையக் கொடுத்து, முடமாகி நிற்கிறார்கள். 800க்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலிலே கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழக மீனவர்களின் பல கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும், இதுவரை தமிழக மீனவர்கள் மீதான இக்கோரத் தாக்குதல்களுக்கும், அநீதிகளுக்கும் எதிராக மத்திய அரசு கண்டனம் தெரிவித்ததுமில்லை.

  எதிர்வினையாற்றி எச்சரித்ததுமில்லை. இதன்விளைவாகத்தான், சிங்கள இராணுவம் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்களைத் தொடுப்பது என்பது தொடர்கதையாகி மாறி வருகிறது. இதனைத் தட்டிக் கேட்காது கைகட்டி வாய்பொத்தி தமிழக மீனவர்கள் மீதான இத்தாக்குதல்களுக்கு மறைமுக ஆதரவளிக்கும் மத்திய அரசின் செயலானது தமிழர்களுக்குச் செய்யும் இனத்துரோகமாகும். இந்நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் தமிழக மீனவர்களின் மீதான இத்தாக்குதலை` இந்திய பெருநாடு வெட்கமின்றி வேடிக்கைப் பார்ப்பது எட்டுகோடி தமிழர்களின் உள்ளத்து உணர்வுகளைச் சீண்டிப் பார்ப்பதாக உள்ளது.

  ஆகவே, இவ்விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு இலங்கை சிறையிலடைக்கப்பட்டுள்ள 29 மீனவர்களையும் மீட்டெடுப்பதற்குரிய துரித நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும், தமிழக அரசு உரிய கவனமெடுத்து மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்களின் விடுதலையைச் சாத்தியப்படுத்த வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: