வரலாறு காணாப் பொருளாதார வீழ்ச்சியினால் நாடே திண்டாடும் சூழலில் தனிப்பெருமுதலாளிகளின் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன்தொகையைத் தள்ளுபடி செய்வதா என நாம் தமிழர் கட்சியின் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “கொரோனோ நோய்த்தொற்று பரவலையொட்டி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நாட்டு மக்கள் யாவரும் செய்வதறியாது வீட்டில் முடங்கிக் கிடக்கையில், 45 கோடி அடித்தட்டு உழைக்கும் மக்கள் பசியோடும், பட்டினியோடும் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கையில் அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த எவ்வித நடவடிக்கையையும் எடுக்க முன்வராத மத்திய அரசு, தனிப்பெரு முதலாளிகள் பெற்ற கடன்தொகை 68,000 கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்திருக்கும் செய்தி நாட்டு மக்களின் தலையில் பேரிடியாய் இறங்கியிருக்கிறது.
நாட்டின் உள்நாட்டு உற்பத்தி விகிதமும், இந்திய ரூபாயின் மதிப்பும் பன்மடங்கு சரிந்து இந்தியாவின் பொருளாதாரம் அதளபாதாள வீழ்ச்சியைச் சந்தித்து, பணவீக்கமும், விலைவாசியும் நாள்தோறும் உயர்கையில் அதனைச் சரிசெய்வதற்கு எவ்வித முயற்சியையும் எடுக்காத மத்திய அரசு தனிப்பெரு முதலாளிகளின் நலனைக் கருத்தில்கொண்டு தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.
பண மதிப்பிழப்பு எனும் மிகத் தவறான முடிவும், சரக்கு மற்றும் சேவை வரி எனும் பிழையான வரிவிதிப்புக் கொள்கையும் இந்தியாவின் பொருளாதாரத்தைப் பிளந்து சிறு, குறு தொழில்கள் யாவற்றையும் நலிவடையச் செய்திருக்கும் சூழலில் அவர்களைக் கைதூக்கிவிட்டு மேலெழச் செய்ய முயற்சியெடுக்காத மத்திய அரசு, முதலாளிகளின் நலனுக்கென்று முழுமூச்சாய்ப் பாடுபடத் துடிப்பது வாக்குச் செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த இந்நாட்டு மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்.
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இயலாது மத்திய ரிசர்வ் வங்கியிலுள்ள ஒரு இலட்சத்து 76 ஆயிரம் கோடி நிதியிருப்பைத் தன்வசப்படுத்திக் கொள்ளும் பொருளாதார நிலையிலுள்ள மத்திய அரசு, தனிப்பெரு முதலாளிகளின் வாராக்கடனை வசூலிக்க முன்வராது அதனைத் தள்ளுபடி செய்ய வேண்டிய தேவையென்ன? வங்கிகள் ஒவ்வொன்றாகத் தொடர்ந்து திவாலாகிக் கொண்டிருக்கும் சூழலில் இத்தனை ஆயிரம் கோடி வாராக்கடனை சத்தமின்றித் தள்ளுபடி செய்ய வேண்டிய நிர்பந்தமென்ன வந்தது?
கொரோனோ நோய்த்தொற்று மீட்புப்பணிகளுக்காக நாட்டு மக்களிடம் நிதியுதவி கோரும் பிரதமர் மோடி, 68 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடனை வசூலிக்காது விடுவிக்க வேண்டிய மர்மமென்ன? சாதாரண ஏழை, எளிய மக்களின் சேமிப்பு மற்றும் கடன் தொகையில் கறாராக நடந்துகொள்ளும் அரச நிர்வாகம், பெருமுதலாளிகள் விவகாரத்தில் மட்டும் பெட்டிப் பாம்பாய் பதுங்குவதும், சாமரம் வீசி சேவகம் புரிவதும் ஏன்? எதற்காக? அவர்களின் வாராக்கடனை வசூலிக்க மட்டும் மென்முறையைக் கையாள முனையும் மத்திய அரசின் போக்கு யாருக்காக நிகழ்கிறது?
பொருளாதார வீக்கம் மற்றும் பண மதிப்பிழப்பால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சரக்கு மற்றும் சேவை வரியை குறைக்கக் கோரியபோது காதில் வாங்க மறுத்த மத்திய அரசு, ஊரடங்கால் பெருநட்டமாகியுள்ள விவசாயிகள் தங்களது விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரும் கோரிக்கையை ஏற்காத மத்திய அரசு, ஊரடங்கால் தொழில் முடங்கி, வருமானமின்றி வறுமையில் சிக்கியுள்ள மக்களின் மாதாந்திரத் தவணை (EMI) உள்ளிட்ட வங்கிக் கடன்களை மூன்று மாதங்களுக்குத் தள்ளி வைப்பதாகப் பெயரளவில் மட்டும் அறிவித்த மத்திய அரசு, தற்போதையப் பேரிடர் கால முடக்கத்திலிருந்து சிறு, குறு, குடிசைத்தொழில்களையும், விவசாயத்தையும் காப்பதற்கு எவ்விதப் பொருளாதார முன்னெடுப்புகளையும் இதுவரை செய்திடாத மத்திய அரசு, ஒரு மாதகால ஊரடங்கிற்கே நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் கூறி, வரிவருவாயை மேலும் அதிகரிக்க வேண்டிய நிலையில் பொருளாதாரத்தை வைத்துள்ள மத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி (GST) உள்ளிட்ட மத்திய அரசின் நிதி பங்களிப்பைக் குறைத்து முறையாக வழங்கத் தவறிய மத்திய அரசு, மாநிலங்களுக்குச் சேர வேண்டிய பேரிடர் கால நிவாரணநிதியில் எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல் குறைந்தபட்ச தொகையைக் கூடத் தரமறுக்கும் மத்திய அரசு, மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்ய மக்களிடமே நிதி கேட்டு நிற்கும் நிலையிலுள்ள மத்திய அரசு, எதன் அடிப்படையில் பெருமுதலாளிகளின் கோடிக்கணக்கான வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய முன்வந்தது? பதில் சொல்வாரா பிரதமர் மோடி?
நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருக்கையிலும் தனிப்பெரு முதலாளிகளின் நலனையே முதன்மைப்படுத்துகிறார்கள் என்றால் இந்த ஆட்சியதிகாரம் யாருக்கானது, வாக்குச்செலுத்திய மக்களுக்கானதா, தேர்தல் நிதியளித்த தனிப்பெரு முதலாளிகளுக்கானதா, யார் பதில் சொல்வது?
பெருமுதலாளிகளுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி குறித்துக் கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியபோது எவ்வித பதிலுமளிக்காமல் நழுவிய மத்திய அரசின் நயவஞ்சகம் தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது. சாகேத் வாகலே என்பவர் தாக்கல் செய்த மனுவிற்குப் பதில் தந்துள்ள ரிசர்வ் வங்கி, கடந்தாண்டு செப்டம்பர் 30 வரை நிலுவையிலிருந்த பெருமுதலாளிகள் 50 பேரின் 68 ,000 கோடி ரூபாய் வரையிலான வாராக்கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளதாக அறிவித்து, விஜய் மல்லையா தொடங்கி யார் யாருக்கு எத்தனை கோடி ரூபாய் என்கிற விபரத்தையும் அளித்துள்ளது. அதன்படி, சராசரியாக ஒரு நபருக்கு 1,300 கோடிக்கும் மேல் கடன் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது.
இத்தொகையானது பல மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட கொரோனா பேரிடர் நிவாரண நிதியைவிட அதிகம் என்பதன் மூலம் முதலாளிகள் மீதான மத்திய அரசின் பாசத்தினையும், நாட்டு மக்கள் மீதான வஞ்சகப் போக்கையும் நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆகவே, ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் அதிகாரக்குவிப்பிலும், எதேச்சதிக்காரப்போக்கிலும், முதலாளித்துவ ஆதரவு நிலைப்பாட்டிலும் ஈடுபட்டு, பிழையான முடிவுகளாலும், தவறான பொருளாதாரக் கொள்கைகளாலும் நாட்டு மக்களை வாட்டி வதைத்துச் சுரண்டலில் ஈடுபடும் இக்கொடுங்கோன்மை அரசு வீழ்ந்தொழியும் நாள் வெகுதொலைவில் இல்லை என மத்திய அரசிற்கு இதன் வாயிலாக எச்சரிக்கை விடுக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Businessman Vijay Mallya, Seeman