Home /News /tamil-nadu /

ஆக்கிரமிப்பு என்றால் ஏழைகளின் குடிசைகள், கூரை வீடுகள் மட்டுமே அரசுக்கு நினைவுக்கு வருமா? சீமான் கேள்வி

ஆக்கிரமிப்பு என்றால் ஏழைகளின் குடிசைகள், கூரை வீடுகள் மட்டுமே அரசுக்கு நினைவுக்கு வருமா? சீமான் கேள்வி

சீமான்

சீமான்

ஒவ்வொரு வீடாகச் சென்று வாக்குக்கேட்டு ஏறி இறங்கும்போதெல்லாம் தெரியவில்லையா அது ஆக்கிரமிப்பு நிலமென்று? இப்போதுதான் ஆக்கிரமிப்பாகத் தெரிகிறதா என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

  ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்துவரும் மண்ணின் மக்களை வாழ்விடத்தைவிட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதை திமுக அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். ஆக்கிரமிப்பு என்றாலே ஏழைகளின் குடிசைகளும், கூரை வீடுகளும் மட்டுமே அரசின் நினைவுக்கு வருவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ சென்னை, சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் அடித்தட்டு மக்களின் வீடுகளை இடித்துத் தகர்த்து, அவர்களை வலுக்கட்டாயமாக வாழ்விடத்தைவிட்டு வெளியேற்றும் திமுக அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. ஆட்சிக்கு வந்தது முதல் தலைநகரைச் சுற்றியுள்ள அடித்தட்டு உழைக்கும் மக்களின் குடியிருப்புகளை அகற்றி, அவர்களை அப்புறப்படுத்தும் அரசின் அதிகார வெறியாட்டம் கடும் கண்டனத்திற்குரியது.

  பெத்தேல் நகரில் நீண்டகாலமாக நிரந்தரக் குடியிருப்புகளை ஏற்படுத்தி மக்கள் வாழ்ந்து வருவதைக் கருத்தில்கொண்டே, கடந்த 2009 ஆம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியின்போது மனைப்பட்டா வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் வீடு ஒப்படைப்பு நிகழ்வு நடைபெறவிருந்த நிலையில் திடீரென திமுக அரசு தான் பிறப்பித்த அரசாணையை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டது. அப்போதிலிருந்து இப்போதுவரை அப்பகுதி மக்கள் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுமனைப்பட்டா கேட்டுப் போராடி வருகின்றனர். ஈஞ்சம்பாக்கம் மக்களை அப்புறப்படுத்துவதா? அல்லது நிரந்தரப்பட்டா வழங்குவதா? என்பது குறித்து தமிழ்நாடு அரசே முடிவெடுக்கலாம் என்று நீதிமன்றமே வழிகாட்டலைக் கொடுத்த நிலையிலும், அவர்களுக்கு பட்டா வழங்கும் முடிவை எடுக்காமல் அந்நிலத்தைவிட்டு அவர்களை வெளியேற்றத் துடிப்பது அம்மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்’ என விமர்சித்துள்ளார்.

  காலங்காலமாக வாழ்ந்த மக்களை ஆக்கிரமிப்பென்று கூறி, அடித்துத் துரத்துவார்களென்றால் வள்ளுவர் கோட்டம் தொடங்கி பல இடங்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புகள்தான்! அவற்றையெல்லாம் இடித்துத் தகர்த்து, நிலத்தை மீட்டுவிடுமா அரசு? அதற்குச் சாத்தியம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ள சீமான், ‘சென்னை பெருநகரில் ஆக்கிரமிப்பு எனும் பெயரில் வணிக வளாகம், கல்வி நிலையம், மருத்துவமனை, திரையரங்கு, பொழுதுபோக்குக்கூடங்கள் எனப் பெருமுதலாளிகளுக்குச் சொந்தமான எதுவொன்றிலாவது அரசு கை வைத்திருக்கிறதா? வைக்க முடியுமா? ஆக்கிரமிப்பென்றால், ஏழைகளின் குடிசை வீடுகளும், எளிய மக்களின் கூரை வீடுகளும் மட்டுமே ஆட்சியாளர்களுக்கு நினைவுக்கு வருவதேன்? அவைகள் மட்டுமே ஏன் கண்ணை உறுத்துகிறது?

  இதையும் படிங்க: காவலர்களின் குறைகளை போக்கிட புதிய காவல் ஆணையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு


  பெத்தேல் நகரில் அம்மக்கள் வாழும் இடம் புறம்போக்கு நிலமென்றால், மக்கள் அங்குக் குடியேறி வாழத்தொடங்கியவுடனேயே அவர்களை அங்கிருந்து வெளியேற்றி இருக்கலாமே? குடியிருப்புகள் அமைக்க அவர்களுக்குத் தடைவிதித்திருக்கலாமே? ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டக் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு , குடிநீர் இணைப்பு, எரிவாயு இணைப்பு, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவை எப்படி வழங்கப்பட்டது? வழங்கிய ஆட்சி யாருடையது? வழங்கிய அதிகாரிகள் யார் யார்? அவர்கள் மீதும் நடவடிக்கை பாயுமா?

  ஆக்கிரமிப்பு எனக்கூறி அகற்றத்துடிக்கும் அதே இடத்திற்கு, ஒவ்வொரு வீடாகச் சென்று வாக்குக்கேட்டு ஏறி இறங்கும்போதெல்லாம் தெரியவில்லையா அது ஆக்கிரமிப்பு நிலமென்று? இப்போதுதான் ஆக்கிரமிப்பாகத் தெரிகிறதா? வெட்கக்கேடு! அதிமுக செய்த அதே பெருந்தவறை செய்து, திமுக அரசு மண்ணின் மக்களை அவர்களது நிலத்தைவிட்டே விரட்டியடிக்குமென்றால், அதிகாரத்தின் துணைகொண்டு நாளும் வதைக்குமென்றால், இதுதான் மக்களுக்கு விடியலைத் தரும் ஆட்சியா?

  அடித்தட்டு உழைக்கும் மக்கள் அரும்பாடுபட்டு உழைத்து சிறுகச் சிறுக சேர்த்தப் பணத்தில் தங்கள் வாழ்நாள் கனவாக எண்ணி கட்டிய வீட்டை இடித்து, அவர்களைக் காவல்துறையைக் கொண்டு அப்புறப்படுத்துவதுதான் சமூக நீதியின்படி நடத்தப்படுகிற ஆட்சியா? நீண்ட நெடுங்காலமாக நிலைத்து வாழ்ந்து வரும் எளிய அடித்தட்டு மக்களின் வீடுகளை இடித்து, அவர்களின் வயிற்றிலடிக்கும் திமுக அரசின் இப்படுபாதகச்செயல் துளியும் மனச்சான்றில்லாத கொடுங்கோன்மைத்தனமாகும்.

  மேலும் படிங்க: பிளாஸ்டிக் தடை: துளிர்க்கும் பனை ஓலைக்கொட்டான் தயாரிப்பு


  ஆகவே, ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகர் மக்களை வாழ்விடத்தைவிட்டு வெளியேற்றும் முடிவைக் கைவிட்டு, உடனடியாக அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.
  Published by:Murugesh M
  First published:

  Tags: Naam Tamilar katchi, Seeman

  அடுத்த செய்தி