முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நாம் தமிழர் மேடையில் திமுகவினர் அத்துமீறல்- சீமான் கண்டனம்

நாம் தமிழர் மேடையில் திமுகவினர் அத்துமீறல்- சீமான் கண்டனம்

சீமான் கண்டனம்

சீமான் கண்டனம்

கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் திமுகவினரின் இப்போக்கு கோழைத்தனத்தின் உச்சம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தருமபுரி மாவட்டம் ஆரூரில்  நாம் தமிழர் கட்சியின் கூட்டம் நடைபெற்றுகொண்டிருந்த மேடையில் ஏறி திமுகவினர் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாற்காலியை வீசியும் அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம், அரூர் தொகுதி, மொரப்பூரில் நேற்று இஸ்லாமிய கைதிகள் மற்றும் ராஜிவ் காந்தி கொலையில் குற்றவாளிகளான 7 பேரை விடுவிக்கக் கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து  நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பேசிய, நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் , தமிழக முதலமைச்சர் மற்றும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி குறித்து தரக்குறைவாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.

அப்போது, திமுகவின் மொரப்பூர் ஒன்றிய செயலாளர் செங்கண்ணன் உள்ளிட்டோர் மேடையேறி நாம் தமிழர் கட்சியினருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினர்.  மேடையில் இருந்த மைக் செட்டை செங்கண்ணன் தள்ளி சேதப்படுத்தினர். அப்போது கீழே இருந்த திமுக நிர்வாகி ஒருவரை மேடையில் இருந்த நாம் தமிழர் நிர்வாகி மீது நாற்காலியை வீசினார்.

இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவியது. உடனடியாக காவல்துறையினர் திமுகவினரை  தடுத்து அங்கிருந்து அழைத்து சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. திமுகவினரின் இந்த செயலுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தருமபுரி மாவட்டம், அரூரில் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைகோரி நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுகவின் வன்முறைக்கும்பல் அத்துமீறி உள்நுழைந்து, மேடையை உடைத்து, கட்சியின் நிர்வாகிகள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் கொலைவெறித்தாக்குதல் நடத்த முற்பட்டதும், அதனைக் காவல்துறையினர் கைகட்டி நின்று வேடிக்கைப் பார்த்ததும் கடும் கண்டனத்திற்குரியது.

கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் திமுகவினரின் இப்போக்கு கோழைத்தனத்தின் உச்சம். வடமாநிலங்களில் பாஜக செய்யும் அதேவகையிலான வன்முறையையும், சனநாயகத்திற்கு எதிரானக் கொடுங்கோல் போக்கையும் ஏவிவிடும் திமுகவினரின் செயல் இழிவானது. அதிகாரத்திமிரிலும், ஆட்சி தந்த மமதையாலும் காவல்துறையைக் கைவசம் வைத்துக்கொண்டு அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றும் திமுகவினரின் செயல் வெட்கக்கேடானது.

நாம் தமிழர் கட்சியின் மேடையை உடைத்து, கட்சியின் நிர்வாகிகள் மீது வன்முறை வெறியாட்டத்தை ஏவிவிட்ட திமுகவினரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

First published:

Tags: DMK, Naam Tamilar katchi, Seeman