Home /News /tamil-nadu /

இந்துஸ்தானாக மாற்ற முயலும் நடவடிக்கை- இந்தி குறித்த அமித்ஷா கருத்துக்கு சீமான் கடும் கண்டனம்

இந்துஸ்தானாக மாற்ற முயலும் நடவடிக்கை- இந்தி குறித்த அமித்ஷா கருத்துக்கு சீமான் கடும் கண்டனம்

சீமான்

சீமான்

இந்தி திணிப்பை இந்தியாவின் மற்ற பகுதிகள் முழுவதும் வாழும் ஒட்டுமொத்தத் தேசிய இனங்களும் ஏற்றாலும், தமிழ்நாடும், தமிழர்களும் எதிர்த்து நின்று சமரசமில்லாது சமர்புரிவோமெனப் பேரறிவிப்பு செய்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, ​​அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும். பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை இந்தியில் சேர்த்தால் அதற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்படாது. இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாகத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல’என்று தெரிவித்தார்.

  அவருடைய பேச்சு தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய கருத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டேக் இரண்டு தினங்களாக ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

  இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில், ‘ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பலதரப்பட்ட மொழிகளைப் பேசும் மக்கள் வாழும் பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பாக விளங்கும் இந்திய ஒன்றியத்தில், அம்மொழிகளுக்குரிய முக்கியத்துவத்தை சரிவிகிதத்தில் தராது, இந்தியெனும் ஒற்றைமொழி ஆதிக்கத்துக்கு வழிவகுத்து, இந்தியாவின் தேசிய மொழியாக இந்தி எனும் ஆரிய மொழியை நிறுவ முயலும் பாஜக அரசின் எதேச்சதிகாரச்செயல்பாடுகள் கடும் கண்டனத்துக்குரியது.

  சென்னை மாநகராட்சி பட்ஜெட் : பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி இலவசமாக வழங்க திட்டம்

  ஆட்சியதிகாரத்தில் அமர்ந்தது முதல், பல்வேறு வடிவங்களில் இந்தியை மெல்ல மெல்லத் திணித்திட முயல்வதும், இறந்த சமஸ்கிருத மொழிக்கு உயிரூட்ட வேலைசெய்வதுமான பாஜக அரசின் போக்குகள், மண்ணின் மக்களுக்கெதிரான ஆரியமுகத்தையே அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது. இந்தியாவிலுள்ள தேசிய இனங்களையும், அதன் தனித்துவ அடையாளங்களையும் முற்றாகச் சிதைத்தழித்து ‘இந்து’,’இந்தி’,’இந்தியா’ என ஒற்றையாட்சியை நிறுவி, இந்தியாவை இந்துஸ்தானாக மாற்ற முயலும் பாஜகவின் கொடுங்கோல் நடவடிக்கைகள் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், இறையாண்மைக்கும் எதிரான கொடுஞ்செயல்களாகும்.

  பாஜக அரசின் இந்தித் திணிப்பை இந்திய நிலப்பரப்பு முழுவதும் வாழும் ஒட்டுமொத்தத் தேசிய இனங்களும் ஏற்றாலும், தமிழ்நாடும், தமிழர்களும் எதிர்த்து நின்று சமரசமில்லாது சமர்புரிவோமெனப் பேரறிவிப்பு செய்து, பாகிஸ்தான் நாடு செய்திட்ட மொழித்திணிப்பினால்தான் வங்காளதேசம் எனும் நாடு பிறந்ததெனும் வரலாற்றுச்செய்தியை நாட்டையாளும் பாஜகவின் ஆட்சியாளர்களுக்கு இத்தருணத்தில் நினைவூட்டுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
  Published by:Karthick S
  First published:

  Tags: Hindi, Seeman

  அடுத்த செய்தி