கள்ளக்குறிச்சி தனியார்ப் பள்ளிக்கெதிரான போராட்டத்திற்குத் திமுக அரசின் அலட்சியப்போக்கே முழுக் காரணம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. பள்ளி சேதப்படுத்தப்பட்டதோடு பள்ளியின் வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த இந்த கலவரம் சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவியின் மர்ம மரணமும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறைகளும் மிகுந்த வேதனையளிக்கிறது. குற்றவாளிகளைக் கைது செய்வதில் அலட்சியமாக இருந்த திமுக அரசு, நீதிவேண்டி போராடியவர்கள்தான் கலவரத்திற்குக் காரணமென்று மக்கள் மீது பழிபோட முயல்வது வன்மையான கண்டனத்திற்குரியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்தக் கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 13ஆம் தேதி அதிகாலை பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ரீமதி பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்து ஐந்து நாட்களாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது காலங்கடத்திய திமுக அரசின் அலட்சியப்போக்கே இத்தனை வன்முறைகளுக்கும் முக்கியக் காரணமாகும்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் மீடியா டிரையல்.. யூ டியூப் சேனல்கள் மீது நடவடிக்கை - நீதிமன்றம் உத்தரவு
மாணவியின் மர்ம மரணத்தில் பெற்றோர் கூறிய குற்றச்சாட்டுகள் மற்றும் கடந்த பத்தாண்டுகளில் அப்பள்ளியில் இதேபோன்று பல மாணவ, மாணவியர் இறந்துபோயிருப்பதாகக் கூறப்படும் செய்திகள் குறித்து எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல் அமைதி காத்த திமுக அரசின் செயல்படாத தன்மையைக் கண்டித்து கடந்த 15ஆம் தேதியே நாம் தமிழர் கட்சி கண்டன அறிக்கை வெளியிட்டு, குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்யக் கோரி அரசை வலியுறுத்தியது. அதன் பிறகாவது, தமிழ்நாடு அரசு காவல்துறை மூலம் சட்ட நடவடிக்கைகளை விரைவு படுத்தியிருந்தால் இத்தகைய வன்முறைகள் நடைபெறாமல் தடுத்திருக்க முடியும்.
இறந்ததாக கூறப்படும் அதிகாலை 6 மணிக்கே மாணவி ஸ்ரீமதி சீருடையில் இருந்தது எப்படி? இறந்த மாணவியின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததும், மாணவி மாடியில் இருந்து விழுந்ததாகக் கூறப்படும் இடத்தில் எவ்வித இரத்தக்கறையும் இல்லையென்பதும் மாணவி மரணத்தின் மீதான சந்தேகத்தை அதிகமாக்குகிறது. விசாரணை முழுமையாக முடியும் முன்பே, மாணவி மரணத்திற்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்ற முடிவுக்குக் காவல்துறை வந்தது எப்படி? பள்ளி நிர்வாகத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லையென்றால் பள்ளியைச்சுற்றி காவல்துறையைக் குவிக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது?
மாணவி மரணித்து 5 நாட்களாகத் தொடர்ப்போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கும் சூழலில் மாவட்ட ஆட்சியர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மாவட்ட பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உள்ளிட்டோர் நிகழ்விடத்திற்கு வராதது ஏன்? மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பான சூழல் உருவாகியுள்ளது என்பதை அரசு முன்கூட்டியே உணரத்தவறியதேன்? பெருங்கலவரத்திற்குப் பிறகு, தற்போது பள்ளி நிர்வாகிகளையும், தொடர்புடைய ஆசிரியர்களையும் கைது செய்துள்ள காவல்துறைக்குத் தொடக்கத்திலேயே அவர்கள் குற்றவாளிகள் என்று தெரியாமல் போனதா? அல்லது தெரிந்திருந்தும் கைது செய்யவில்லையா?
மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் : இறுதிச் சடங்கு அசம்பாவிதம் இன்றி அமைதியாக நடக்கவேண்டும் - தந்தைக்கு நீதிமன்றம் உத்தரவு
முன்கூட்டியே குற்றவாளிகளைக் கைது செய்திருந்தால் வன்முறை நடைபெறாமல் தடுத்திருக்க முடியும் என்ற நிலையில், மக்கள் வீதிக்கு வந்து போராடினால்தான் நீதியைப் பெறமுடியும் என்ற சூழலை உருவாக்கியது யார்? குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கத்துடன் அலட்சியமாகச் செயல்பட்ட திமுக அரசு, தன் மீதான தவற்றினை மறைப்பதற்காகப் போராடிய மக்களைத் சமூக விரோதிகளாக, கலவரக்காரர்களாகச் சித்தரிக்க முயல்வது எவ்வகையில் நியாயமாகும்? போராடியது தவறு என்றால் மக்களைப் போராடும் நிலைக்குத் தள்ளிய அரசும் குற்றவாளிதானே? என்று அடுக்கடுக்காக எழும் கேள்விகளுக்கு ஆட்சியாளர்கள் என்ன பதில் கூறப்போகிறார்கள்?
ஆகவே, தமிழ்நாடு அரசு இனியாவது நீதிவிசாரணையைத் தீவிரப்படுத்தி, மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்திற்குக் காரணமானவர்களுக்குக் கடும் தண்டனையைப் பெற்றுத்தர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், மாணவியின் மரணத்திற்கு நீதிவேண்டி போராடிய மக்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கும் போக்கினை அரசு கைவிட வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Girl dead, Kallakurichi, Seeman, Student