ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மருத்துவமனைகளின் கட்டமைப்பை மேம்படுத்தாமல் ஆய்வு என்ற பெயரில் திமுக விளம்பர அரசியல் செய்கிறது - சீமான்

மருத்துவமனைகளின் கட்டமைப்பை மேம்படுத்தாமல் ஆய்வு என்ற பெயரில் திமுக விளம்பர அரசியல் செய்கிறது - சீமான்

ஆய்வு செய்த அமைச்சர்கள் - சீமான்

ஆய்வு செய்த அமைச்சர்கள் - சீமான்

அரசு மருத்துவமனைகளின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல், மருத்துவர் - செவிலியர் பற்றாக்குறையைச் சரிசெய்யாமல், அவர்களது குறைகளையும் கோரிக்கைகளையும் தீர்க்காமல், வெற்று விளம்பர அரசியலுக்காக திடீரென அமைச்சர்கள் ஆய்வு என்ற பெயரில் அரசு மருத்துவர்களைத் தரக்குறைவாகப் பேசுவதும், பணியிட மாற்றம் செய்வதும் ஏற்புடையதல்ல.

மேலும் படிக்கவும் ...
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வேலூர் மாவட்டம் பொன்னை ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் கடந்த வாரம் அமைச்சர் மா.சுப்பிரமணியனும், அமைச்சர் துரைமுருகனும் ஆய்வு மேற்கொண்டனர்.

  அப்போது பாம்பு கடிக்கு மருந்துகள் அங்கு இல்லை என தெரிந்தவுடன் அங்கு இருக்கும் மருத்துவர்களை பணியிடை மாற்றம் செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரிந்துரை செய்தார். இதற்கு சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வேலூர் மாவட்டம், பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகள் மருத்துவர்கள், மற்றும் மருத்துவக் கருவிகள் பற்றாக்குறையைத் தீர்க்க பலமுறை கோரியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழ்நாடு அரசு, அங்குப் பணியாற்றி வந்த அரசு மருத்துவர்கள் மீது பழி சுமத்தி, அவர்களைப் பணியிடமாற்றம் செய்து தண்டிக்கும் எதேச்சதிகார போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. திமுக அரசின் அமைச்சர்கள் பொதுமக்களையும், அரசுப் பணியாளர்களையும் அவமதிக்கும் வகையில் தொடர்ந்து நடந்துகொள்வது அதிகாரத் திமிரினை வெளிப்படுத்தும் ஆணவ மனப்பான்மையேயாகும்.

  இதையும் படிக்க : கன்னியாகுமரிக்கு தூக்கி அடிங்க.. அரசு மருத்துவரை பணியிட மாற்றம் செய்ய சொன்ன அமைச்சர் துரைமுருகன்..

  தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையைப் போக்க திமுக அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

  கடந்த நான்கு மாதங்களாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாம்புக்கடி உள்ளிட்ட அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகளின் பற்றாக்குறை அதிகளவில் உள்ளதாக அரசு மருத்துவர்களே குற்றஞ்சுமத்தும் நிலையில் அவற்றை திமுக அரசு சரி செய்யாதது ஏன்?

  பெரும்பாலான கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் இடிந்துவிழும் நிலையிலுள்ள பழைய கட்டிடங்களில் இயங்கும் நிலையில், அவற்றை புதிய கட்டிடங்களாக மாற்ற தமிழ்நாடு அரசு எந்த முயற்சியும் ஏன் எடுக்கவில்லை?

  திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளின் நிர்வாக வசதிக்கு போதிய நிதியை ஏன் ஒதுக்கப்படவில்லை? கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தபடி, அரசு மருத்துவர்களுக்குப் பத்தாண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஊதிய உயர்வு இதுவரை ஏன் வழங்கவில்லை? அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் தற்காலிக செவிலியர்களை ஏன் பணி நிரந்தரம் செய்யவில்லை? என்ற இந்த கேள்விகளுக்கெல்லாம் திமுக அரசு என்ன பதில் கூறப்போகிறது?

  இதையும் படிக்க : வர்ணமும் ஜாதியும் முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டியவை: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு

  எனவே, அரசு மருத்துவமனைகளின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல், மருத்துவர் - செவிலியர் பற்றாக்குறையைச் சரிசெய்யாமல், அவர்களது குறைகளையும் கோரிக்கைகளையும் தீர்க்காமல், வெற்று விளம்பர அரசியலுக்காக திடீரென அமைச்சர்கள் ஆய்வு என்ற பெயரில் அரசு மருத்துவர்களைத் தரக்குறைவாகப் பேசுவதும், பணியிட மாற்றம் செய்வதும் ஏற்புடையதல்ல. அரசு தன் மீதான தவறுகளை மறைப்பதற்காக அரசு மருத்துவர்களையும், செவிலியர்களையும் பலிகடா ஆக்குவது எவ்வகையில் நியாயமாகும்?

  வேலூர் மாவட்டம், பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மீதான பணியிடமாற்ற நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்’ என்று வலியுறுத்திள்ளார்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: DMK, Durai murugan, Ma subramanian, Seeman, TamilNadu Politics