பிரதமர் மோடி, சீன அதிபர் வருகை... இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள பாதுகாப்பு பணிகள்...!

Mamallapuram Summit | மாமல்லபுரம் வரவுள்ள பிரதமர் மோடிக்கும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கும் தமிழக மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமர் மோடி, சீன அதிபர் வருகை... இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள பாதுகாப்பு பணிகள்...!
பிரதமர் மோடி | அதிபர் ஜீ ஜின்பிங்
  • News18
  • Last Updated: October 10, 2019, 12:05 PM IST
  • Share this:
பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையையொட்டி, சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பாதுகாப்பு நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள 34 சிறப்பு அதிகாரிகளையும் தமிழக அரசு நியமித்துள்ளது.

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்க மாமல்லபுரம் முழுவீச்சில் தயாராகியுள்ளது. பளபளக்கும் சாலைகள், பசுமை போர்த்திய புல்தரைகள், வண்ணமயமான விளக்குகள், புதுப்பொலிவுடன் ஜொலிக்கும் புராதன சின்னங்கள் என மாமல்லபுரம் விழாக்கலோம் பூண்டுள்ளது. இருநாட்டு தலைவர்களுக்கான குண்டு துளைக்காத கண்ணாடி அறை, கலைநிகழ்ச்சிகளுக்கான மேடை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையை புதுமையாக்கும் பணியில் 500க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மாமல்லபுரத்தில் மட்டும் 2 ஐ.ஜி, 4 டி.ஐ.ஜி, 15 ஏ.எஸ்.பி-க்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குதிரைகள் மூலமாக காவலர்கள் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர, கடலிலும் இந்தியா - சீனா போர்க்கப்பல்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.


ஈஞ்சம்பாக்கம் முதல் புதுப்பட்டினம் வரையிலான கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மின்பிடிக்கச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 12-ம் தேதி வரை மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், திருமண நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் டிரோன் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமானநிலையம் முதல் மாமல்லபுரம் வரை உள்ள சாலைகளில் இரண்டு அடுக்கு மாடிகளுக்கு மேல் கொண்ட 190 பெரிய கட்டடங்களை போலீசார் கணக்கெடுத்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த கட்டடங்களில் செயல்பட்டு வரும் நிறுவனங்களில் எத்தனை பேர் பணிபுரிகிறார்கள்? புதிதாக யாராவது பணியில் சேர்ந்து உள்ளார்களா? வெளிநாட்டினர் யாரேனும் வேலை செய்கிறார்கள்? என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.

தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் தங்கியுள்ளவர்களின் விபரத்தை சேகரிக்கும் போலீசார், புதிதாக யாரேனும் அறை எடுத்து தங்கினால் உடனடியாக அவருடைய விவரங்களை தெரிவிக்குமாறு விடுதி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர். திபெத் நாட்டினர் பணி செய்தால் அல்லது தங்கியிருந்தாலும் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தபட்டுள்ளது.இதனிடையே, கேளம்பாக்கத்தில் எந்தவித ஆவணங்களுமின்றி சுற்றி திரிந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். வாடகைக்கு வீடு கேட்டு வந்த அவர்கள் இருவர் மீதும் மதுரவாயல் காவல்நிலையத்தில் கொள்ளை வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள 34 சிறப்பு அதிகாரிகளையும் தமிழக அரசு நியமித்துள்ளது.

மாமல்லபுரம் வரவுள்ள பிரதமர் மோடிக்கும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கும் தமிழக மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இரு நாட்டு ஆளுமைகளின் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெறுவது தமிழ்நாட்டின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தியுள்ளது எனக் கூறியுள்ளார்.

இந்த நிகழ்விற்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள முதலமைச்சர், தமிழக மக்கள் சார்பாகவும், தமிழ்நாடு அரசின் சார்பாகவும் இரு உலகத் தலைவர்களையும் வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.

Also watch

First published: October 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading