ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சுத்தியலா? சாவியா?... பேரூராட்சி தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு சொன்ன ரகசியம்!

சுத்தியலா? சாவியா?... பேரூராட்சி தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு சொன்ன ரகசியம்!

வெ. இறையன்பு

வெ. இறையன்பு

Iraianbu IAS : நாம் எப்போதும் மக்களின் மனதிலே இருந்து பணியாற்றுவது மிகவும் முக்கியம் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் பேரூராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்களுக்கான பயிற்சி முகாமில் அறிவுரை வழங்கினார்.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பேரூராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் நடைபெற்றது. நிறைவு விழா நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர்  இறையன்பு, அமைச்சர் கே.என் நேரு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது தலைமைச் செயலாளர் இறையன்பு பல்வேறு உதாரணங்களையும் கதைகளையும் சொல்லி உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டுமென விளக்கினார். இது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ் பேசுகையில், பயிற்சியும் முயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு எத்தனையோ சரித்திரச் சான்றுகள் இருக்கின்றன.

பயிற்சியும் முயற்சியும் இருந்தால்:

முயற்சியை முன்மொழிய, பயிற்சி வழிமொழிய பின்னர் நாம் தொடர்ச்சியாக அதைக் கடைப்பிடித்தால் எழுச்சியை பெற முடியும் என்பதற்கு பைனோ என்ற ஒரு இளைஞனின் கதை கிரேக்கத்தில் உண்டு. பையனோ என்கிற இளைஞன் மிகப்பெரிய காளைகளை எல்லாம் தன் தோளில் தூக்கி வைத்து நடை பயில்வான். அவரிடம் கேட்டார்கள். எப்படி உன்னால் காளைகளை எல்லாம் தூக்க முடிகிறது? என்று. நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டு பசு ஒரு கன்றை ஈன்றது. நான் உடனடியாக அந்த கன்றை எடுத்து என்னுடைய தோளில் வைத்துக் கொண்டு நடந்தேன். தினமும் அந்த கன்றை எடுத்துக் கொண்டு நடப்பேன் ஒருநாள் பார்த்தேன், அந்த கன்றுக்குப் பதிலாக காளை இருந்தது என்று சொன்னான். தினசரி பழகினால் நாளடைவில் காளை கூட கன்றைப் போல எடையில்லாமல் இருக்கும் என்பதைப் போல, பயிற்சி பெற்று நாம் பெற்றவற்றை எல்லாம் முறையாக செயல்படுத்தினால் பேரூராட்சிகளிலே வளம் கொழிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஒரு பானை நிறைந்து காணப்பட்டால் அந்த பானையில் எந்த நீர் நிறைத்தது என்று கூறமுடியாது. முதலில் விழுந்த துளியும் முக்கியம். இறுதியாக விழுந்த துளியும் முக்கியம். அதைப்போல நிர்வாகத்தைப் பொறுத்தவரை உள்ளாட்சி அமைப்புகளும் முக்கியம். மேலே இருக்கிற அரசின் உயர் மட்டங்களும் முக்கியம். எனவே, உள்ளாட்சிகளின் கட்டமைப்பால்தான் ஒரு அரசு நிர்வாகம் செம்மையாக நடக்க முடியும் என்பதால்தான் உங்களுக்கு என்ன பொறுப்புகள் இருக்கின்றன என்பதை வழங்குவதற்காக இந்த பயிற்சி நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு உதாரணமாக திகழ்ந்தது:

உலகத்திற்கே உள்ளாட்சி அமைப்புக்கான உதாரணமாக திகழ்ந்தது நம் தமிழ்நாடு என்பதை மறந்து விடாதீர்கள். பத்தாம் நூற்றாண்டில் முதலாம் பராந்தக சோழன் என்பவனுடைய காலத்திலே கல்வெட்டுகள் பதிக்கப்பட்டு உள்ளாட்சி நிர்வாகத்தை தலைவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற குறிப்புகள் எல்லாம் பதியப்பட்டிருக்கின்றன. உத்திரமேரூரில் 2 கல்வெட்டுகளும் தஞ்சையில் பள்ளிப்பாக்கம் என்ற இடத்தில் ஒரு கல்வெட்டும் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் எவ்வளவு நேர்மையானவர்களாகவும், உண்மையானவர்களாகவும், பொதுநலத்தில் அக்கறையுள்ளவர்களாகவும் கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்களாகவும் இருக்க வேண்டும் என்ற குறிப்புகள் எல்லாம் வழங்கப்பட்டிருக்கின்றன. எனவே, அவற்றை மனத்திலே வைத்து நீங்கள் உங்கள் பணியை ஆற்ற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

“காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்” என்று திருவள்ளுவர் ஒரு தலைவன் எப்படியிருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். எளிமையாக இருக்க வேண்டும், யார் வேண்டுமானாலும் அணுகுகிற மாதிரி இருக்க வேண்டும் என்பது பேரூராட்சித் தலைவர்களுக்கும், துணை தலைவர்களுக்கும் மிகவும் பொருத்தம் என்று நான் எண்ணுகிறேன். அதிலும் குறிப்பாக இன்று நாம் மின்னணு சாதனங்கள் எல்லாம் பெருகிவிட்ட சூழலில் வாழ்கிறோம். நாம் சொல்கிற சொற்கள் அறையிலே இருப்பவர்களுக்கு கேட்பதற்கு முன்னால் அரங்கத்திற்குள் இருப்பவர்களுக்கு கேட்பதற்கு முன்னால் வெளியே வந்துவிடுகிற சூழல் இன்று உருவாகியிருக்கிறது.

பயிற்சி முகாம்

அனைத்தையும் பதிவு செய்ய முடியும். மற்றவர்களுக்கு எடுத்துச் செல்ல முடியும் என்ற சூழலில் சிறிதும் கோபப்படாமல் நாம் அக்கறையின்மையோடு இல்லாமல் பொறுப்பாக பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதையும் யார் வேண்டுமானாலும் அலைபேசியில் நம்மோடு தொடர்பு கொண்டால் அவர்களுக்கு அக்கறையோடும் அன்போடும் பதில் சொல்ல வேண்டும் என்பதை இந்த பயிற்சியில் உங்களுக்கு சொல்லி கொடுத்திருப்பார்கள்.

அதிகாரங்கள் அல்ல, பொறுப்புகள்:

இந்த பயிற்சி ஒன்றை தெளிவுப்படுத்துகிறது உங்களுக்கு என்னென்ன அதிகாரங்கள் இருக்கின்றனவோ அந்த அதிகாரங்கள் எல்லாம் உண்மையில் அதிகாரங்கள் அல்ல, பொறுப்புகள் என்பதைதான் இந்த பயிற்சி உங்களுக்கு உணர்த்துகிறது. சிலப்பதிகாரத்திலே வஞ்சிக்காண்டத்திலே சேரன் செங்குட்டுவன் “மழைவளம் கரப்பின், வான் பேர் அச்சம்; பிழை உயிர் எய்தின், பெரும் பேர் அச்சம்; குடி புரவுண்டும் கொடுங்கோல் அஞ்சி, மன்பதை காக்கும் நன் குடிப் பிறத்தல் துன்பம் அல்லது, தொழுதகவு இல்” என்று குறிப்பிடுகிறான்.

அதனுடைய பொருள் மழை பெய்யாவிட்டாலும் ஆளுகிறவர்களுக்குதான் பொறுப்பு. தவறாக ஒரு உயிரை கொய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் ஆள்பவர்களுக்குத்தான் பொறுப்பு. தலைமை பொறுப்பில் இருப்பது என்பது துன்பம்தானே தவிர அது இன்பம் அல்ல என்கிற கருத்து கூறப்பட்டிருக்கிறது. அதைப்போல இந்த தலைமைப் பொறுப்பில் இருக்கிறவர்கள் ஒவ்வொரு நொடியையும் மக்களின் நலனுக்காக செலவழிப்பதையும் அந்த பொறுப்பை உணர்ந்து அவர்களுடைய துன்பங்களை எல்லாம் களைய வேண்டும் என்ற அக்கறையோடு செயல்படுவதையும் தங்களுடைய வாழ்வின் நோக்கமாக வைக்க வேண்டும் என்பதற்காகதான் இந்த பயிற்சியில் முதல் அமைச்சர் அவர்களே இந்த நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உங்களிடம் உரையாற்றுகிறார் என்பதை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

பெண்களின் முக்கியத்துவம்:

இங்கே வந்திருப்பவர்களில் சரிபாதிக்கு மேல் பெண்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. பெண்கள் வரலாற்று நிகழ்வுகளிலே முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்பதை ஹீரோஸ் அப் ஹிஸ்டரி என்ற புத்தகத்தில் Will Durant என்ற எழுத்தாளர் குறிப்பிடுகிறார். பெண்கள்தான் ஆண்களுக்கு வேளாண்மை செய்ய கற்றுக் கொடுத்தார்கள். ஆண்கள் வேட்டையாடி திரிந்த போது விதைகள் விழுந்தால் முளைக்கும் நீங்கள் வேட்டையாடி உங்கள் உயிரை பணயம் வைக்க வேண்டியதை இல்லை என்று கூறி வேளாண்மையை கற்றுக் கொடுத்தவர்கள் பெண்கள். இன்று நாம் வைத்திருக்கிற 14 வளர்ப்பு மிருகங்களை எல்லாம் வன விலங்குகளாக இருந்த போது தடவிக் கொடுத்து அவைகளை வளர்ப்பு மிருகங்களாக ஆக்கியவர்கள் பெண்கள்தான்.

பயிற்சி முகாமில் முதலமைச்சர் பேச்சு

இப்படி எல்லா விலங்குகளையும் வளர்ப்பு மிருகங்களாக மாற்றியது பெண்கள்தான். ஆண்களுக்கு அவர்கள் அன்பை போதித்தார்கள். இப்படி அன்பை போதித்து கடைசியாக பெண்ணால் வளர்ப்பு மிருகமாக ஆக்கப்பட்டவன்தான் ஆண் என்று குறிப்பிடுகிறார்.

Must Read : மு.க.ஸ்டாலின், மருமகன் சபரீசனுக்கு எதிரான அவதூறு வழக்குக்கு இடைக்காலத் தடை

நாம் இலக்கியத்தை பார்க்கலாம். சிலப்பதிகாரம் மணிமேகலை போன்ற இரண்டு இரட்டை காப்பியங்களிலும் பெண்கள்தான் தலைவிகளாக இருக்கிறார்கள். ஷேக்ஸ்பியர் எழுதிய Merchant of venice என்கிற அந்த நாடகத்திலே ஒரு பெண்தான் வழக்கறிஞராக மாறி வாதிட்டு வெல்வதற்கு துணை புரிவார். இப்படி நம்முடைய எல்லா இலக்கியங்களிலும் பெண்கள் பெருமைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து நீங்கள் அனைவரும் உங்களுடைய பொறுப்பை நீங்களே கையில் வைத்துக் கொண்டு அந்த பொறுப்பை செம்மையாக செயல்பட்டு முடிவுகளை நீங்களே எடுத்து உங்கள் கண் முன்னால் உங்கள் பேரூராட்சி நாளும் வளர்வதைப் பார்த்து மகிழ்ந்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இதயத்தினுள் நுழையுங்கள்:

நாம் எப்போதும் மக்களின் மனதிலே இருந்து பணியாற்றுவது மிகவும் முக்கியம். ஒரு சாவியைப் பார்த்து சுத்தியல் கேட்டது. நான் கனமாக இருக்கிறேன். பெரிதாக இருக்கிறேன். ஆனால் நான் பூட்டை திறப்பதற்கு அதிக நேரமாகிறது. ஆனால் நீ ஒரு நொடியில் திறந்து விடுகிறாயே எப்படி என்று. சாவி சொன்னது நீ வெளியே இருந்து வேலை செய்கிறாய். நான் உள்ளே நுழைந்து வேலை செய்கிறேன் என்று. எனவே நீங்கள் அனைவரும் மக்கள் மனதை திறக்கிற திறவுகோலாக இருந்து இதயத்தினுள் நுழைந்து பணியாற்றி மிகச் சிறந்த பேரூராட்சிகளை உருவாக்கி தமிழகத்திற்குச் சென்று பாருங்கள். தலைச் சிறந்த பேரூராட்சிகள் இருக்கின்றன என்று தரணிக்கே வழிகாட்டும் வகையில் பணியாற்ற வேண்டும்.” இவ்வாறு கூறினார் வெ.இறையன்பு.

Published by:Suresh V
First published:

Tags: Chief Secretary, Iraianbu IAS