காரில் ரகசிய அறை.. சிக்கிய 90 லட்சம்.. ஹவாலா பணமா? (வீடியோ)

Youtube Video

கோவை அருகே கடத்தப்பட்ட கார் மீட்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக காரின் ரகசிய அறையில் இருந்து 90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணக் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹவால பணத்தின் பின்னணி என்ன?

 • Share this:


  நகைகடை உரிமையாளரின் கணக்கில் வராத பணத்தை காரில் பதுக்கி கடத்தி சென்ற கும்பல் சிக்கிய வழக்கில் வழக்கு அமலாக்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காரில் பதுங்குகுழி அமைத்து 90 லட்சம் கடத்தப்பட்டதன் பின்னணி என்ன?

  கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் 50 வயதான அப்துல் சலாம். கேரளாவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த 25 ம் தேதி பெங்களூருவில் இருந்து தனது காரில் கோவை வழியாக கேரளாவுக்கு சென்றுள்ளார். காரை டிரைவர் சும்சுதீன் ஒட்ட இருவர் மட்டுமே காரில் பயணித்துள்ளனர். நெடுஞ்சாலையில்சென்ற கார் கோவை நவக்கரை அருகே வந்துள்ளது.

  அப்போது அப்துல்சலாம் காரை பின் தொடர்ந்து வந்த மற்றொரு கார் ஆள்அரவம் இல்லாத இடம் பார்த்து அப்துல்சலாம் காரை மறித்துள்ளது. காரிலிருந்து இறங்கிய மர்மகும்பல், அப்துல்சலாமை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து 27 லட்சம் ரூபாயை கொள்ளையடித்தது.

  அப்துல் சலாமையும், அவரது டிரைவரையும் தாக்கி கீழே தள்ளிய கும்பல் அவர்களது 2 செல்போன்களையும் பறித்துக் கொண்டு காரையும் கடத்தி சென்றது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கே.ஜி.சாவடி போலீசாரிடம் அப்துல் சலாம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

  இதற்கிடையே கோவை-சிறுவாணி சாலையோரம் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த அப்துல் சலாமின் காரை போலீசார் மீட்டனர். கோவை பேரூர் பச்சாபாளையம் சாலை ஓரம் கிடந்த 2 செல்போன்களையும் போலீசார் கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்ட காரை தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர்.

  அப்போது காரின் பின் இருக்கையின் கீழ் மற்றும் காரின் கதவுகளல் ரகசிய அறைகள் இருப்பதை போலீசார் கண்டுப்பிடித்தனர். ரகசிய அறையை திறந்து பார்த்த போது அதில் கட்டு கட்டாக பணம் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை கணக்கிட்ட போது 90 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.

  மர்மகும்பல் 27 லட்சம் ரூபாயை திருடி சென்றதாக,  அப்துல்சலாம் புகார் கொடுத்திருந்த நிலையில் 90 லட்சம் சிக்கியது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்துல் சலாமிடம் நடத்திய விசாரணையில் கடத்தப்பட்ட பணம் கேரளா மலப்புரத்தை சேர்ந்த நகைகடை அதிபர் முகமது அலி என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது.

  மேலும், முகவது அலி சொல்லும் இடத்தில் இது போன்ற பணத்தை அடிக்கடி சென்று எடுத்து வருவதாக சலாம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். சிக்கிய கணக்கில் வராத பணம் ஹவாலா பணமா? சலாமுக்கும் முகமது அலிக்குமான தொடர்பு என்ன? என்பது தொடர்பாக போலீசார் விசாரண தொடங்கியுள்ளனர்.

  கணக்கில் வராத 90 லட்சம் சிக்கியது தொடர்பான வழக்கை அமலாக்க துறையிடம் ஒப்படைத்துள்ள போலீசார், கார் கடத்தல் வழக்கை விசாரித்து வருகின்றனர். காரின் கதவுகளிலும் இறுக்கையின் கீழேயும் பணம் கட்டு கட்டாக கடத்தப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  மேலும் படிக்க...சிறுமி மீது கொண்ட ஆசையால் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: