ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி, திமுக ஆதரவு நாளேடுகளை தமிழக ஊராட்சி நூலகங்களில் திணிக்கும் போக்கைக் கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக ஊராட்சி நூலகங்களில் திமுக ஆதரவு நாளேடுகளையும், இதழ்களையும் வாங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் வாயிலாக தமிழக அரசு வற்புறுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
‘கட்சிக்கும், ஆட்சிக்கும் இடைவெளி இருக்க வேண்டும். அரசியல் மாச்சரியங்களை ஒருபோதும் ஆட்சியதிகாரத்தில் திணிக்கக்கூடாது’ என முழங்கிட்ட அறிஞர் அண்ணாவின் கூற்றுக்கு மாறாக, அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்களது அரசியல் மேலாதிக்கத்தை நிறுவ முற்படுவதும், அதிகார அத்துமீறலை அரங்கேற்றுவதும் கண்டனத்திற்குரியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
புதிதாக நிறைய நூலகங்கள் உருவாக்கப்பட வேண்டும். அவைகள் பராமரிக்கப்பட்டுப் புதிய நூல்களும், இதழ்களும் மக்களின் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட வேண்டும். அதனைச் செய்ய முன்வராது, ஒரு கட்சியின் சார்புடைய ஏடுகளுக்கு மட்டுமேயான பகுதியாக நூலகங்களை மாற்றுவது சரியல்ல.
ஊராட்சி நூலகங்களில் எல்லா இதழ்களையும், நாளேடுகளையும் வாங்க உத்தரவுப் பிறப்பித்தால் அது ஏற்புடையது; வரவேற்கத்தக்கது. அதனைவிடுத்து, திமுக ஆதரவு நாளேடுகளையும், இதழ்களையும் மட்டும் வாங்குவதற்கு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது நிர்வாகச்சீர்கேடாகும். தான் உயர்மட்ட அதிகாரத்திலிருப்பதால், தனது நூல்களை வாங்கவோ, அதனைச் சந்தைப்படுத்தவோ வேண்டாமென அதிகாரிகளுக்கு உத்தரவுப் பிறப்பித்த தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் ஐயா இறையன்பு அவர்களது அறிவிப்பு வரவேற்பைப் பெற்ற நிலையில், நடைபெறும் இதுபோன்ற செயல்பாடுகள் ஏமாற்றமளிக்கிறது.
ஆகவே, தமிழக ஊராட்சி நூலகங்களுக்கு திமுக ஆதரவு ஏடுகளை வாங்குவதற்கு உத்தரவு பிறப்பித்திருக்கும் அறிவிப்பினைத் திரும்பப் பெற்று, எவ்விதச் சார்புமில்லாது எல்லா இதழ்களையும், ஏடுகளையும் நூலகங்களுக்கு வாங்குவதற்கு உத்தரவிட வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.