எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அனைத்து வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் ஏற்பு

எஸ்.டி.பி.ஐ.

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அனைத்து வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் ஏற்பு.

 • Share this:
  2021 தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அனைத்து வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டதாக அக்கட்சியின் மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.கரீம் தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தமிழக சட்டமன்றத் தேர்தலில், எஸ்.டி.பி.ஐ. கட்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியுடன் இணைந்து, ஆலந்தூர், ஆம்பூர், பாளையங்கோட்டை, திருவாரூர், மதுரை மத்தி, திருச்சி மேற்கு ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலிலும் அமமுக கூட்டணியில் இணைந்து நெல்லிதோப்பு, அரியாங்குப்பம், காரைக்கால் வடக்கு, மாஹே ஆகிய 4 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிடுகிறது.

  பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், ஆம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக தென்சென்னை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. பொதுச்செயலாளர் முகம்மது தமீம் அன்சாரி, மதுரை மத்தி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக கட்சியின் மாநில வர்த்தகர் அணி செயலாளரும், மதுரை மாவட்ட துணைத்தருமான சிக்கந்தர் பாட்ஷா, திருவாரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில பொதுச்செயலாளர் நஸிமா பானு, திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் அப்துல்லா ஹஸ்ஸான் ஆகியோர் தேர்தல் போட்டியில் களமிறங்கியுள்ள நிலையில், அவர்கள் தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்கள் அனைத்தும் தேர்தல் கமிஷனால் ஏற்கப்பட்டுள்ளன.

  Must Read : இபிஎஸ், ஓபிஎஸ், மு.க.ஸ்டாலின் வேட்புமனுக்கள் ஏற்பு: அண்ணாமலை வேட்புமனு நிறுத்தி வைப்பு

   

  இதேப்போல் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காரைக்கால் வடக்கு தொகுதியில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் தமீம் கனி, நெல்லிதோப்பு தொகுதியில் போட்டியிடும் ஹனிபா, அரியாங்குப்பம் தொகுதியில் போட்டியிடும் முஹம்மது காசிம், மாஹே தொகுதியில் போட்டியிடும் உமர் மாஸ்டர் ஆகியோரின் வேட்புமனுக்களும் தேர்தல் கமிஷனால் ஏற்கப்பட்டுள்ளன.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Suresh V
  First published: