கொரோனா வைரஸ் உருமாற்றம் குறித்து பதற்றம் அடைய வேண்டாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்திலிருந்து பரவும் கொரோனா வைரசின் புதிய உருமாற்றம் தொடர்பாக மக்களிடையே பல கேள்விகளும், சந்தேகங்களும் நிலவுகின்றன. B.1.1.7 எனப்படும் பிரிட்டன் உருமாறிய கொரோனா செப்டம்பர் மாதமே கண்டறியப்பட்டதாகும். கடந்த இரண்டு மாதங்களில் அது ஏற்கனவே இந்தியாவிற்குள் நுழைந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. ஜப்பான், கனடா, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, ஸ்வீடன் உள்ளிட்ட 20 நாடுகளிலும் இது பரவியுள்ளதை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதே சமயம், அந்த நாடுகளிலிருந்து வரும் விமானங்கள் தடை செய்யப்படவில்லை, பயணிகள் பரிசோதிக்கப்படுவதில்லை. எனவே இந்தியாவில் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள 20 நோயாளிகளுக்கும் கூடுதலாக, புதிய உருமாற்ற வைரஸ் பரவியிருக்கலாம். அதனால் அச்சமடையவோ, பதட்டமடையவோ வேண்டாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
உருமாற்றம் அடைந்த புதிய வகை வைரஸுக்கு நாம் ஏற்கெனவே கொடுத்துக் கொண்டிருக்கும் சிகிச்சை முறைதான் மேற்கொள்ளப்படுகிறது. வைரஸ் உருமாற்றம் இங்கிலாந்தில்தான் ஏற்பட வேண்டும் என்றில்லை. நமது நாட்டிலேயே கூட உருமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
“அமெரிக்காவில் ஒருவருக்கு இந்த வகை கொரோனா கண்டறியப்பட்டது. ஆனால் அவர் பிரிட்டன் செல்லவில்லை. பிரிட்டன் சென்றவர்களுடன் தொடர்பிலும் இல்லை. எனவே புதிதாக அங்கேயே உருவாகியிருக்கலாம் என கருதப்படுகிறது. இதே போன்று தெற்கு ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வகை புதிதாக கண்டறியப்பட்டது. அதுவும் பரவி வருகிறது " என தொற்று நோய் மருத்துவர் சுப்ரமணியன் சுவாமிநாதன் கூறுகிறார்.
‘சீனாவில் கொரோனா வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. அந்த உருவத்தில் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன’ என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த உருமாற்றங்களினால் நோயாளகளின் அறிகுறிகள், பாதிப்புகள் மாறுபடுவோ தீவிரமடையவோ இல்லை. இதனால் சிகிச்சை முறையை மாற்றும் அவசியம் ஏற்படவில்லை. மேலும் தடுப்பு மருந்துகள் கொரோனா வைரசின் அனைத்து வகை உருமாற்றங்களையும் கட்டுப்படுத்தும் என்று தான் இது வரை கிடைத்துள்ள தரவுகள் காட்டுகின்றன.
அதே சமயம் மரபணு வரிசை ஆய்வு செய்யும் வசதிகளை இந்தியாவில் அதிகரிக்க வேண்டும் என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் மரபணு வரிசை செய்வதற்கான வசதிகள் கொல்கத்தா, புபனேஸ்வர், பெங்களூரூ, ஐதராபாத், டெல்லி, புனே உள்ளிட்ட ஆறு நகரங்களில் உள்ள 10 ஆய்வகங்களில் மட்டுமே உள்ளன.
Also read... கொரோனா: சென்னை மாநகராட்சி கொண்டு வந்துள்ள சூப்பர் திட்டம்..!
கொரோனாவுக்கு எதிர்வினையாற்றும் இந்திய அறிவியலார்கள் அமைப்பை சேர்ந்த, மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயிரிதொழில்நுட்ப பேராசிரியராக பணியாற்றிய கிருஷ்ணசாமி இது குறித்து கூறுகையில், "உலக அளவில் அதிக கொரோனா பாதிப்புகளை கொண்ட இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது. ஆனால் 2000 நோயாளிகளில் ஒருவரிடமிருந்து மட்டுமே, கொரோனா வைரஸ் மரபணு வரிசை பரிசோதனை செய்யப்படுகிறது.
இதை அதிகரித்தால் வைரஸ் பற்றிய அதிக புரிதல் நமக்கு ஏற்படும். மாவட்ட அளவில் மரபணு வரிசை செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட வேண்டும். வைரஸ் உருமாறிக் கொண்டே இருக்கும் என்பது அதன் இயல்பு. அதை கண்டு பதற்றம் அடையாமல் இருக்க வேண்டும். அதே சமயம் அதனை கண்காணிக்கும் கட்டமைப்புகள் ஏற்படுத்துவது அதிக அறிவியல் புரிதலோடும், கவனத்துடனும் இருக்க உதவும்" என கூறுகிறார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.