Home /News /tamil-nadu /

சென்னையில் ஆசிரியர்கள் விடிய விடிய போராட்டம்

சென்னையில் ஆசிரியர்கள் விடிய விடிய போராட்டம்

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும்வரை கலைந்துசெல்ல மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
சம வேலைக்கு சம ஊதியம் கோரி, சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் 1500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் விடிய விடிய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கடந்த 2009-ம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் கோரி, 2009-ம் ஆண்டுக்குப் பின்பு நியமிக்கப்பட்ட சுமார் 21,000 இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தை முற்றுகையிட ஆசிரியர்கள் நேற்று முன்தினம் முயன்றனர்.

அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார், ராஜரத்தினம் மைதானத்தில் அடைத்து வைத்தனர். இதையடுத்து, ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிலர் மயக்கமடைந்து, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மைதானத்திலிருந்து நேற்று மாலை விடுவிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் டிபிஐ வளாகத்துக்கே வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வரும் இடைநிலை ஆசிரியர்கள்.


இதில், கர்ப்பிணி பெண்களும் கலந்து கொண்டுள்ளனர். இதேபோல, கைக்குழந்தைகளுடனும் சுமார் 1,500-க்கும் மேற்பட்டோர் விடிய விடிய டிபிஐ வளாகத்திலேயே போராட்டம் நடத்தினர். உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டனர். இதனால், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை, டிபிஐ வளாகத்திலிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என்று இடைநிலை ஆசிரியர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

Also see.... PHOTOS: 2-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!
Published by:Vaijayanthi S
First published:

Tags: Chennai, Teachers Protest

அடுத்த செய்தி