மாணவன் சுத்தியலால் அடித்துக் கொலை.. தாய் திட்டியதால் ஏற்பட்ட விபரீதம்...

Youtube Video

தேனி மாவட்டத்தில், சக மாணவனைப் போல் நன்றாகப் படிக்க வேண்டும் என்று தாய் திட்டியதால், சக மாணவனை சுத்தியலால் மண்டையில் அடித்துக் கொலை செய்துள்ளார் 19 வயது மாணவன். கொலைகார மாணவன் சிக்கியது எப்படி?

 • Share this:
  சக மாணவனான தனசேகரனைச் சுட்டிக் காட்டி தனது படிப்பு சரியில்லை என தாய் கண்டித்ததால் ஆத்திரமடைந்த மாணவன் சீமான், நண்பன் என்றும் பாராமல் தனசேகரனைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். 

  தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூரைச் சேர்ந்தவர் முருகன் - முத்துலட்சுமி தம்பதியின் மகன் 17 வயதான தனசேகரன். இவர் கண்டமனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் - பாக்கியலட்சுமி தம்பதியின் மகன் 19 வயதான சீமான் அதே பள்ளியில் தனசேகரனுடன் ஒரே வகுப்பில் படித்து வந்தார்.

  படிப்பில் சீமான் பின்தங்கிய நிலையில் இருந்ததால், சீமானை அவரது அம்மா பாக்கியலட்சுமி, தனசேகரன் மாதிரி நீ நன்றாக படிக்காமல், சேட்டை செய்கிறாய் எனக் கூறி அடிக்கடி திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவன் சீமான், "உன்னால் தான், என்னை என் அம்மா திட்டுகிறார்" எனக் கூறி தனசேகரனுடன் அடிக்கடி சண்டை போட்டுள்ளார்.

  திங்கட்கிழமை பள்ளியில் மதிய உணவு இடைவேளையின் போது தனசேகரன் தேர்வுக்காகப் படித்துக் கொண்டிருந்தார். அங்கு சென்ற சீமான், அவருடன் சண்டையிட்டு கையில் வைத்திருந்த சுத்தியலால் தனசேகரனின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாணவன் தனசேகரன் அங்கேயே ரத்த வெள்ளத்தில் விழுந்தார்.

  சக மாணவர்களின் தகவலின் பேரில் தனசேகரன் மீட்கப்பட்டு முதலில் தேனி அரசு மருத்துவமனைக்கும் பின்னர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார்.  சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை தனசேகரன் உயிரிழந்தார்.  வழக்கை கொலை வழக்காக மாற்றிப் பதிவு செய்த கண்டமனூர் போலீசார், சீமானைக் கைது செய்தனர்.

  தனசேகரனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் செவ்வாய்க்கிழமை கண்டமனூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது தனசேகரனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டமனூர் - தேனி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

  அப்போது தனசேகரனின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும்; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டு்ம்; அரசுப் பள்ளி தலைமையாசிரியரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனப் பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.

  மேலும் படிக்க... டீக்கடையில் வடை போட்டு வாக்கு சேகரித்த பெரம்பலூர் தொகுதி தேமுதிக வேட்பாளர்

  அவர்களின் கோரிக்கைகளின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் சமாதானம் தெரிவித்த நிலையில் 3 மணிநேர போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. மாணவனின் இறுதிச் சடங்குகள் நிறைவேறின. சக மாணவனைச் சுட்டிக் காட்டி தாய் திட்டியதால் அந்த மாணவனையே நண்பன் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் கண்டமனூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: