பள்ளிகள் திறப்பு ரத்து: அறிவிப்புகளின் மூலம் மக்களை மேலும் மேலும் குழப்ப வேண்டாம் - மு.க. ஸ்டாலின் காட்டம்..

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் வரும் 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த உத்தரவை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இந்நிலையில், மாணவர்களை குழப்ப வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

  • Share this:
    கல்லூரிகளும், 9, 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகளும் வரும் 16-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்து இருந்தது. இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், பண்டிகை காலங்களில் கொரோனா அதிகரிக்கும் அச்சத்தையும், பெற்றோர்கள் தெரிவித்த மாறுபட்ட எண்ணங்களையும் கருத்தில்கொண்டு, 16-ஆம் தேதி பள்ளி திறப்பு என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.

    பள்ளி திறப்பு குறித்த இந்த அறிவிப்பு பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், எந்த முன்யோசனைகளும் இல்லாமல் அறிவிப்பதும், பின்னர் அதிலிருந்து பின்வாங்குவதும் அரசின் வழக்கமாக ஆகிவிட்டது என்று விமர்சித்துள்ளார்.



    கொரோனாவை விட அரசு அறிவிப்புகளின் மூலமாக எழும் பீதிகள்தான் அச்சம் தருவதாக, அந்த பதிவில் ஸ்டாலின் கூறி உள்ளார். பள்ளிகள் திறப்புத் தேதி குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும் என்பது இந்த அரசின் ஊசலாட்ட மனநிலையைக் காட்டுவதாகவும் ஸ்டாலின் சாடி இருக்கிறார். குழப்பவாதிகள் கையில் அரசு இருக்கிறது என்பதற்கு, பள்ளித்திறப்பு உதாரணம் ஒன்றே போதும் என்று குறிப்பிட்டுள்ள அவர், குழப்ப அறிவிப்புகளின் மூலமாக மக்களை மேலும் மேலும் குழப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
    Published by:Rizwan
    First published: