நெல்லை பள்ளி விபத்துக்கு காரணம் பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் அலட்சியப் போக்கே காரணம் என ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நெல்லை பள்ளி சுவர் இடிந்து விழந்த விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூரில் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் தீயில் கருகிய நிலையில் 10 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்த துக்கம் ஆறுவதற்குள் நேற்று திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் கழிவறைச் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியும், நான்கு மாணவர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்ற செய்தியும் என்னை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருநெல்வேலி பொருட்காட்சி திடல் அருகேயுள்ள சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை கழிவறைச் சுவர் இடிந்து விழுந்ததில் அப்பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்களான கே.அன்பழகன், டி.விஸ்வரஞ்சன் மற்றும் 6-ம் வகுப்பு மாணவர் ஆர்.சுதிஷ் ஆகிய மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சில மாணவர்கள் படுகாயமடைத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த மாணவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துவதோடு, அவர்களின் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் சக மாணவர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் அனுதாப்பத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும்.
Also Read: 3 மாணவர்கள் உயிரிழந்த நெல்லை பள்ளி விபத்தில் நடந்தது என்ன? மாவட்ட ஆட்சியர் விளக்கம்
சம்பவம் தனியார் பள்ளியில் நிகழ்ந்திருந்தாலும். தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கும் இதில் பொறுப்பு உண்டு. ஏனெனில் தனியார் பள்ளிகளுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குவது பள்ளிக் கல்வித் துறை தான். பள்ளிகளில் உள்ள கட்டங்கள், வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் நன்கு வலுவாக உள்ளனவா, ஆய்வகங்கள் முறையாக செயல்படுகிறதா, விளையாடுவதற்கு மைதானம் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து தான் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
குறிப்பிட்ட இடைவெளியில் பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை ஆய்வு செய்து, அதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதனை பள்ளி நிர்வாகத்திடம் எடுத்துரைத்து அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற கட்டளையை பிறப்பிக்கும் அதிகாரமும் பள்ளிக் கல்வித் துறைக்கு உண்டு. ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை சீரமைக்க வேண்டிய கடமை பள்ளி நிர்வாகத்திற்கும் உண்டு.
Also Read: ராஜேந்திர பாலாஜி எந்நேரமும் கைதாக வாய்ப்பு - பெங்களூருவில் பதுங்கலா?
கொரோனா நோய்த் தொற்று காரணமாக பள்ளிகள் நீண்ட நாட்கள் மூடப்பட்ட நிலையையும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கனமழையையும் கருத்தில் கொண்டு பள்ளியின் கட்டடங்களை பள்ளி நிர்வாகம் தானாகவே ஆய்வு செய்து சீரமைத்திருக்க வேண்டும். ஆனால் அதை பள்ளி நிர்வாகம் செய்யத் தவறியதன் காரணமாக இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடைபெற்றிருக்கிறது. பள்ளிக்கல்வித்துறையும் ஆய்வு செய்ய தவறிவிட்டது. இது பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது. இதற்கு அதிமுக சார்பின் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
நிதி நிலையைக் காரணம் காட்டி அரசுப் பள்ளிகளை சீரமைப்பதில் மெத்தனப் போக்கை அரசு கடைபிடிக்கக்கூடாது என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.தமிழக முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டுமானங்கள் குறித்து உடனடியாக அறிக்கை பெற்று, அரசு பள்ளிகளில் பழுதடைந்த கட்டுமானங்களை விரைந்து சீர் செய்யவும் , தனியார் பள்ளிகளில் பழுதடைந்த கட்டுமானங்களை உடனடியாக சீர்செய்ய பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தவும்.
Also Read: நளினிக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
விபத்துக்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிற மாணவர்களுக்கு அரசு செலவில் உயரிய சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கான நிவாரணம் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கான நிவாரணம் போதுமானதாக இல்லை என்பதால் அதனை உயர்த்தி வழங்க வழிவகை செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Accident, ADMK, Children death, Death, DMK, Nellai, OPS, Private schools, School student