விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 3 பேர் நிலை கவலைகிடமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள அச்சங்குளம் கிராமத்தில், மாரியம்மாள் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது. பேன்சி ரக பட்டாசுகளில் முனை மருந்து செலுத்தும் பணியின் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக அருகே இருந்த 15 அறைகள் இடிந்து தரைமட்டமாகின.
தகவலறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் சாத்தூர், சிவகாசி மற்றும் கோவில்பட்டி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில், சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆறு பேருக்கு 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டார். பட்டாசு ஆலை வெடிவிபத்து குறித்து விரிவாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் உறுதியளித்துள்ளார்.
வெடிவிபத்து நிகழ்ந்த இடத்தில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன், பட்டாசு ஆலைகளில் விபத்து நிகழாமல் இருப்பதற்காக விதிமுறைகளை கடுமையாக செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.
பட்டாசு ஆலை வெடிவிபத்து கவலையளிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைவார்கள் என நம்புவதாகவும் பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.
இதேபோன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் பதிவில், இதுபோன்ற விபத்துகள் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் சாதாரணமாகிவிட்டதாகவும், உயிரிழப்புக்கு போதிய நிவாரணமும், விபத்துகள் தொடராமல் தடுப்பது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sattur