தங்கள் மனங்கவர்ந்த இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் பணியிடம் மாற்றப்பட்டால், மாற்றக் கூடாது என மக்கள் போராட்டம் நடத்துவார்கள், போஸ்டர் அடிப்பார்கள். ஆனால் காவல்துறை வரலாற்றில் முதன் முறையாக சாத்தான்குளம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதற்கு மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளது தமிழகத்திற்கு புதுசுதான். அப்பகுதி மக்கள் இந்த போலீசாரால் எந்தளவுக்கு துன்பட்டிருப்பார்கள் என்பதை காட்டுகிறது இந்த கொண்டாட்டம்..
சாத்தான் போலீஸ் என விமர்சிக்கும் அளவுக்கு கொடூரத்தனம் செய்ததும், அது அம்பலமானதும் எப்படி?
சாத்தான்குளத்தில் போலீசாரின் சித்திரவதையால் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின் படி செவ்வாய்கிழமை வழக்கு சிபிசிஐடி கைக்கு சென்றது.
புதன்கிழமை சிபிசிஐடி ஐஜி சங்கர், எஸ்.பி. விஜயகுமார் தலைமையில், விசாரணை தொடங்கியது. 3 டிஸ்எஸ்பி, 11 காவல் ஆய்ளவாளர்கள் 40க்கும் மேற்பட்ட போலீசார் 12 குழுக்களாக பிரிந்தனர்.
கோவில்பட்டி கிளைச் சிறை, அரசு மருத்துவமனை, சாத்தான்குளம் காவல்நிலையம், மருத்துவமனை, தந்தை-மகன் வீடு, பென்னிக்ஸின் கடை என அங்குலம் அங்குலமாக சோதனையில் ஈடுபட்டனர்.
சாத்தான்குளம் தலைமை காவலர் ரேவதியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர். அவர் போலீசாருக்கு எதிராக சாட்சியம் அளித்தார்.
தந்தை-மகன் அடைக்கப்பட்ட கோவில்பட்டி கிளைச் சிறையில், சிபிசிஐடி ஆய்வாளர் சரவணகுமார் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.
ஆய்வாளர் தேவி தலைமையிலான ஒரு குழுவினர் சாத்தான்குளம் பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். சாத்தான்குளம் பகுதியில் அரசு மருத்துவமனை, ஜெயராஜ் வீடு கடை உள்ளிட்ட பகுதிகளிலும் சிபிசிஐடி போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தினர்.
உயிரிழந்த இருவருக்கும் மருத்து பரிசோதனை செய்த பெண் மருத்துவர் வினிலாவின் வாக்குமூலத்தையும் சிபிசிஐடி போலீசார் பதிவு செய்தனர்
ஏராளமான ஆதாரங்கள் சிக்கியதால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, கொடுங்காயம் ஏற்படுத்துதல், தடயங்களை அழித்தல், கொலைக்கு நிகரான குற்றம் இழைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் செவ்வாய்க்கிழமை சிபிசிஐடி போலீசார் பதிவு செய்தனர்.
பின்னர் சாத்தான்குளம் உதவி ஆய்வாளராக இருந்த ரகுகணேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். ரகு கணேஷ் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து சாத்தான்குளம் மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
ரகுகணேசிடம் தந்தை மகன் மரணம் தொடர்பாக வாக்குமூலத்தை சிபிசிஐடி போலீசார் பதிவு செய்தனர். பின்னர் தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன்னிலையில் ரகுகணேசை ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் பேரூரணி சிறையில் அடைத்தனர்.
இதனிடையே சாத்தான்குளம் உதவி ஆய்வாளராக இருந்த பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் முருகன், முத்துராஜ் இரவில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விடிய விடிய சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், தந்தை-மகன் மீது தாக்குதல் நடந்தபோது சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக இருந்து தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஸ்ரீதர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் இருந்தனர்.
அவரை புதன்கிழமை விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி போலீசார் சொன்னதாக தெரிகிறது. ஆனால் அவர் ஆஜராகாமல் இருந்துள்ளார்.
நெல்லை மாவட்டம் வழியாக சொந்த ஊரான தேனிக்கு தப்பிச் செல்ல முயன்றபோது, அதிகாலையில் கங்கைகொண்டான் சோதனைச் சாவடியில் சிக்கியுள்ளார்.
அவரை கைது செய்த சிபிசிஐடி போலீசார் அவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவலர் ரேவதியைப் போல, சாத்தான்குளம் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரையும் அப்ரூவராக மாறியுள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள காவலர் முத்துராஜாவும் அப்ரூவராக மாற சிபிசிஐடி போலீசாரிடம் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய காவலர்கள் அடுத்தடுத்து அப்ரூவராக மாறி வருவதால் இந்த வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் கூண்டோடு சிக்குவார்கள் என்கிறார்கள் சிபிசிஐடி போலீசார்.
தந்தை ஜெயராஜ் மற்றும் சகோதரர் பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக குரல்கொடுத்த அனைவருக்கும் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
கோவில்பட்டியில் உள்ள காவலர் முத்துராஜ் உறவினர் வீட்டில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன், கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
கைது செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் காவலர் முருகன் ஆகியோர் 15 மணி நேர விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் முன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
பரிசோதனைக்குப் பிறகு குற்றவியல் நீதித்துறை நீதிபதி ஹேமா முன்னிலையில் ஆஜர் படுத்தப் பட்டனர். வியாழன் அன்று காலையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்த விசாரணையில், 24 மணிநேரத்தில் சிபிசிஐடி போலீசார் சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாராட்டு தெரிவித்தனர்.
மேலும் படிக்க...
குற்றவாளியைப் பிடிக்க சென்ற இடத்தில் ரவுடிகள் துப்பாக்கிச்சூடு - 8 போலீசார் உயிரிழப்பு
மேலும் சிபிசிஐடி போலீசாரின் நடவடிக்கைகள், தமிழக காவல்துறை மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்கக் கூடாது என நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Double Murdered, Kovilpatti, Sathankulam