சாத்தான்குளம் வழக்கு - நெல்லை சிபிசிஐடி., டி.எஸ்.பி., விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்புக்கு காரணமான காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது

சாத்தான்குளம் வழக்கு - நெல்லை சிபிசிஐடி., டி.எஸ்.பி., விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்
  • Share this:
வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் உயிரிழப்பு குறித்த விவசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தது தொடர்பான அவமதிப்பு வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது கூடுதல் கண்காணிப்பாளர் குமார், டிஎஸ்பி பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் நேரில் ஆஜராகினர். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற அறிவுறுத்தல்படி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த ஏடிஎஸ்பி மற்றும் டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும்,

நீதித்துறை நடுவரை அவதூறாக பேசிய காவலர் மகாராஜன் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். காவலர்கள் செய்தது தவறு என்றும் அதிக மன அழுத்தம் காரணமாகவே இந்த நிகழ்வு நடைபெற்றதாகவும் முறையிட்டார்.


அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீதித்துறை நடுவர் தான் விசாரிக்கிறார் என்பதை அறிந்தும் ஏன் பிரச்னையை பெரிதுபடுத்தும் விதமாக நடந்து கொண்டது ஏன் என்று கேள்வியெழுப்பினர்.

தொடர்ந்து காவலர்கள் மூன்று பேர் தரப்பில் வழக்கறிஞர்களை நியமித்து உரிய விளக்கம் அளிக்க 4 வாரம் அவகாசம் அளித்து நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.


படிக்க: ’ஏற்கெனவே டிக்டாக் உள்ளிட்ட ஆப்கள் வைத்திருந்தாலும்...’ மத்திய அரசு வைத்த செக்

படிக்க: விலக்குகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்?

தந்தை, மகன் பிரேத பரிசோதனையில் அவர்களது உடலில் மோசமான காயங்கள் இருப்பது உறுதியாவதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், அதனடிப்படையில் காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாகக் கூறினர்.

காவலர் ரேவதி சாட்சி அளிக்கையில் மிகவும் அச்சமடைந்து காணப்பட்டதாக நீதித்துறை நடுவர் கூறியிருப்பதால், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

சிபிஐ அனுமதி பெற்று விசாரணை தொடங்குவதற்குள் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறிய நீதிபதிகள், சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் வரை நெல்லை சரக டிஐஜி அல்லது நெல்லை சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கு விசாரணையை ஏற்க முடியுமா என்று கேள்வியெழுப்பினர்.

இதுதொடர்பாக அரசின் பதிலை பெற்று தெரிவிக்கும்படி கூறி விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் சிபிசிஐடி போலீசார் வழக்கை விசாரிக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையேற்றுக் கொண்ட நீதிபதிகள், நெல்லை சிபிசிஐடி டி.எஸ்.பி அனில்குமார் இந்த வழக்கில் இன்றே விசாரணையை தொடங்க உத்தரவிட்டனர்.

இறுதியில், உடல்நிலை, உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
First published: June 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading