'இரவு 8 மணிமுதல் அதிகாலை 3 மணிவரை, கொடூரமாகத் தாக்கினர்' - நியூஸ் 18-க்கு கிடைத்த ரேவதியின் எழுத்துப்பூர்வ சாட்சியம்..

எங்களை அடிக்காதீர்கள் என்ற தந்தை, மகனின் குரல்கள் கேட்கவில்லை என்றால் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், என்ன அங்க சத்தம் கேட்க மாட்டேங்குது என்பார் என்று குறிப்பிட்டுள்ளார் காவலர் ரேவதி இன்ஸ்பெக்டர் கேட்ட உடன் மற்ற காவலர்கள் உடனே மீண்டும் இருவரையும் தாக்கத் தொடங்குவார்கள் என்று கூறியுள்ளார் காவலர் ரேவதி

  • Share this:
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமைக் காவலர் ரேவதி கொடுத்த எழுத்துப் பூர்வமான சாட்சியம் முதன் முறையாக நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு கிடைத்துள்ளது. அதில், இரவு 8 மணி முதல் அதிகாலை 3 மணி வரை தந்தை மகன் இருவரையும் போலீசார் கொடூரமாகத் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

சாத்தான்குளத்தில், வியாபாரிகள் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரால் போலீசாரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்பெக்டர் முதல் காவலர் வரை 9 போலீசார் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

இந்தச் சூழலில், சம்பவம் நடந்தபோது சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இருந்த தலைமைக் காவலர் ரேவதியின் சாட்சியம் இதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. தூத்துக்குடி நீதித்துறை நடுவர் சக்திவேல் முன்னிலையில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 164 கீழ் சாத்தான்குளம் காவலர் ரேவதி தன் கைப்பட எழுதிக் கொடுத்த கடிதம் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு கிடைத்துள்ளது.


அதில், தந்தை - மகன் இருவரையும் முதல் ரவுண்டில் SI பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். இரண்டாவதாக. SI ரகு கணேஷ் மற்றும் காவலர்கள் தாக்கியதாகவும், இரவு 8 மணி முதல் அதிகாலை 3 மணி வரை இருவரும் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தாக்கப்படும் போது, எங்களை அடிக்காதீர்கள் என்ற தந்தை, மகனின் குரல்கள் கேட்கவில்லை என்றால் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், 'என்ன சத்தம் கேட்க மாட்டேங்குது என்பார்' என்று குறிப்பிட்டுள்ளார் காவலர் ரேவதி. இன்ஸ்பெக்டர் கேட்ட உடன் மற்ற காவலர்கள் உடனே மீண்டும் இருவரையும் தாக்கத் தொடங்குவார்கள் என்று கூறியுள்ளார் காவலர் ரேவதி

எஸ்ஐ பாலகிருஷ்ணன், தந்தை மகனை அடித்துக் கொண்டிருந்தபோது காவல்நிலையம் உள்ளே சென்ற ரேவதியைப் பார்த்து இவர்களை அடி என்று கூறியதாகவும் தான் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். பென்னிக்ஸ் உடலில் வழிந்த ரத்தத்தை அவரது பனியனை வைத்து அவரையே துடைக்கும்படி போலீசார் கூறியதாகவும் ரேவதி குறிப்பிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தன்னிடம் தண்ணீர் கேட்டதாகவும் தான் தண்ணீர் கொடுத்ததாகவும் ரேவதி கூறியுள்ளார்

 

இதற்கிடையே கடந்த மாதம் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் சில பக்கங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து தந்தையும் மகனும் கொடூரமாகத் தாக்கப்பட்டது குறித்து விவரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட போலீசாரில் சிலர் தந்தை மகனின் கைகளைப் பிடித்துக்கொள்ள, இருவரையும் உடைகளைக் களைந்து உள்ளாடையுடன் குனிய வைத்து போலீசார் மிகக் கொடூரமாக லத்தியால் அவர்களின் பின்புறத்தில் தாக்கியதாக சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.

அரசு மருத்துவரிடம் இருவரையும் காண்பிக்கும் முன்பு அவர்களது ரத்தக் கறை படிந்த உடைகளை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு நண்பர்கள் மூலம் கொண்டு வரப்பட்ட துணிகளை உடுத்தி, மருத்துவரிடம் அவர்களை போலீசார் காண்பித்துள்ளனர் என்கிறது சிபிஐ குற்றப்பத்திரிகை.

சம்பவத்தன்று தந்தை, மகன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி எப்ஐஆர் பதிவு செய்ததோடு , ரத்தக்கறை படிந்து துணிகளை வீசி எறிந்ததன் மூலம் தடயங்களை அழிக்கவும் போலீசார் துணிந்துள்ளனர் என சிபிஐயின் குற்றப்பத்திரிகை குற்றம்சாட்டியுள்ளது. சிபிஐ தரப்பில் வலுவான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணை தொடங்கும் எனத் தெரிகிறது.
First published: October 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading