Home /News /tamil-nadu /

நீர்நிலைகளில் அமைந்துள்ளதா சாஸ்த்ரா பல்கலை? ஆவணங்கள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம்உத்தரவு

நீர்நிலைகளில் அமைந்துள்ளதா சாஸ்த்ரா பல்கலை? ஆவணங்கள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம்உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

'வழக்கு முடியும் வரை சாஸ்த்ரா பல்கலைக்கழக கட்டடங்கள் சென்னை உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருக்கும் ' - நீதிமன்றம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் கிராமத்தில் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகம் மற்றும் அதன் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதி கட்டிடங்கள் நீர் நிலைகளில் அமைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தமிழக அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் பல அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன.

    இதன் அடிப்படையில் நான்கு வாரங்களுக்குள் இடத்தை காலி செய்யும்படி தஞ்சாவூர் வட்டாட்சியர் தரப்பில் பல்கலைகழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் கடந்த 35 ஆண்டுகளாக  அனுபவித்து வரும் 31.37 ஏக்கர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு நிலத்தை தங்களுக்கு ஒதுக்கும்படியும், வித்தியாச தொகையும் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வைத்த கோரிக்கையை தமிழக அரசு  நிராகரித்து உத்தரவு பிறப்பித்தது.

    இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என். மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தரப்பில், அரசு நிலத்துக்கு பதிலாக வேறு நிலத்தை மாற்றிக் கொள்ளும் வகையில் கடந்த மே மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாகவும், அதன்படி மாற்று இடம் வழங்கத் தயாராக இருப்பதாகவும், அதற்கு அனுமதிக்க கோரி அரசுக்கு  விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படுமா என்பதை அரசு விளக்கினால், இந்த வழக்கை நடத்த ஏதுவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

    அப்போது தமிழக அரசு தரப்பில்,  ஆக்கிரமிப்பின் மீது 35 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்க விடாமல் பல்கலைக்கழக நிர்வாகம் தடுப்பதாகவும், சீல் வைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தின் பிற பகுதிகளில் சிறுசிறு ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றால், முதலில் சாஸ்த்ரா அக்கிரமித்துள்ள நிலத்தை மீட்டெடுங்கள் என பொதுமக்கள்  வலியுறுத்துவதாகவும், எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நீர் நிலை ஆக்கிரமிப்பு உள்ளதால் மாற்று இடம் பெறும் அரசாணை சாஸ்த்ரா பல்கலைகழகத்திற்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

    ALSO READ |  தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் உள்ளன? அறிக்கை தாக்கல் செய்ய அரசிற்கு நீதிமன்றம் உத்தரவு!

    இதன்பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சாஸ்த்ரா ஆக்கிரமித்துள்ள 30 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தில் ஒரு பகுதி நீர்நிலை என்பதால் மே மாத அரசாணை பொருந்தாது என அரசு கூறுவதால், ஆக்கிரமிப்பு நிலம் நீர்நிலைதான் என்பதை நிரூபிப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர். அரசின் நடவடிக்கையால், அங்கு தங்கியுள்ள மற்றும் படிக்கின்ற மாணவர்களின் கல்விக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதால், வழக்கு முடியும் வரை சாஸ்த்ரா பல்கலைக்கழக கட்டடங்கள் சென்னை உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருக்கும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Chennai High court

    அடுத்த செய்தி