ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரம்: சசிகலா தலைமையில் ஆட்சி - நமது எம்.ஜி.ஆரில் கட்டுரை

ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரம்: சசிகலா தலைமையில் ஆட்சி - நமது எம்.ஜி.ஆரில் கட்டுரை

சசிகலா

சசிகலா ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று நமது எம்.ஜி.ஆர் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டணி அமைக்கும் வேலை தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில், நமது எம்.ஜி.ஆரில் வெளியாகியுள்ள கட்டுரையில், ‘சசிகலாவுக்கு தொண்டர்கள் மட்டுமல்ல. தமிழக மக்கள் அனைவரும் அரணாக நிற்பதால், அவரது எழுச்சியை நசுக்குவதற்கு நச்சு கும்பல் ஒன்று சசிவலைகளை பின்னியிருக்கிறதாம். அதனை கண்டு ஒருபோதும் அஞ்சவும் மாட்டார். பயந்து விலகவும் மாட்டார். துணிவின் சிகரம் சசிகலா. தீயசக்தி கூட்டத்துக்கு சதிகாரர்கள் கூட்டத்துக்கு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலே கடைசி தேர்தல் என்பதை செயலாக்கி காட்டுவதோடு அத்தகைய கூட்டத்தை புறமுதுகிட்டு ஓடச் செய்வார்.

    சசிகலா தலைமையில் ஆட்சி அமைந்தே தீரும். அதற்கான களத்தை சரியான வியூகத்துடன் அமைத்து உறுதியுடன் பணியாற்றி வெற்றியை நிலை நாட்டுவார். சசிகலா அமைதியாகிவிட்டார்... இவ்வளவுதானா என்று ஆருடம் கணிக்கிறார்கள். அமைதி எழுச்சிக்கு அச்சாரம், இன்றைக்கு நாடெங்கும் சசிகலாவின் அரசியல் நிலைப்பாடு குறித்தே விவாதமாகவும், பேச்சாகவும் உள்ளது. தமிழகத்தில் சசிகலாவின் அலை வீசத் தொடங்கிவிட்டதை காணமுடிகிறது. தமிழக மக்களின் எண்ணங்களை, தேவைகளை நன்றாக அறிந்து அதனை செய்து தரக்கூடிய ஒரே தலைவர் இன்றைக்கு இவர்தான் என்ற உறுதி மக்களிடையே திடமாக ஏற்பட்டுள்ளது. சசிகலாவின் அரசியல் பயணத்தில் எவ்வித தடையும் இல்லை. குழப்பமும் இல்லை.

    கடுமையாக உழைத்து கழக வேட்பாளர்களை மகத்தான வெற்றி பெறச் செய்வார். இன்னும் 36 நாட்களே இடையில் உள்ளது. இதற்கு ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்காளர்களின் ஆதரவைப் பெற்று வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெறப்போவைத எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு எத்தனை இடங்கள் வெற்றி என்பது மட்டும் முக்கியமல்ல. எத்தனை சதவிகித வாக்குகள் சசிகலா பெற்றுத் தந்தார்கள். கழக ஆட்சியை அமைத்து காட்டினார்கள் என்பதை எல்லாம் மக்கள் பேசும் காலம் ஊடகங்கள் விவாதிக்கும் காலம் வெகு தூரமில்லை. சசிகலாவோடு தோளோடுதோள் நிற்க, அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் ஒன்றுபட்டு உழைக்க வாருங்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: