சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வருக்கும் விசாரணை நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் விதித்தது. இதையடுத்து, மறைந்த ஜெயலலிதாவைத் தவிர மீதமுள்ள 3 பேரும், 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில், சசிகலாவின் தண்டனைக் காலம் நிறைவுபெறவுள்ளதையடுத்து, எப்போது விடுதலை செய்யப்படுவார் என்று கேள்வி எழுந்துவந்தது.
முன்னதாக, சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி தகவல் உரிமை சட்டத்தின்கீழ் பெற்ற தகவல்படி, அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பில்லை என்றும், அபராதத் தொகை செலுத்திவிட்டால் ஜனவரி 27ஆம் தேதி விடுதலை ஆவார் என்றும் சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்தது. இதனை அடுத்து, சசிகலா கடந்த மாதம் அபராத தொகை செலுத்தினார். எனவே, இம்மாதம் 27ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டுவந்தது. இருப்பினும், சசிகலா விடுதலை செய்யப்படுவது குறித்து சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாமல் இருந்து வந்தது.
இந்தநிலையில், ஜனவரி 27 காலை 10 மணி அளவில் விடுதலை செய்யப்படுகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது கர்நாடக சிறைத்துறை. மின்னஞ்சல் மூலமாக சசிகலா தரப்பு வழக்கறிஞருக்கு தகவல் வழங்கியுள்ளது கர்நாடக சிறைத்துறை.
இந்தநிலையில், சிறையிலிருக்கு சசிகலாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. சிறை வளாகத்திலுள்ள மருத்துவர்கள் சசிகலாவுக்கு சிகிச்சையளித்தனர். அதனையடுத்து, அவரை வீல் சேரில் அமரவைத்து பெங்களூருவிலுள்ள பவுரிங் அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு அங்கு ஆன்டிஜென் முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா இல்லை என்று வந்துள்ளது. மேலும், அவருக்கு பி.சி.ஆர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விடுதலை செய்யப்படவுள்ள நிலையில், சசிகலா உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்