SASIKALA SHOULD INVOLVES IN ACTIVE POLITICS SAYS PREMALATHA SKD
சசிகலாவை வேண்டாம் என்பது வருத்தமாக உள்ளது: அவர் தமிழக அரசியலில் ஈடுபடவேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா
சசிகலாவை வேண்டாம் என்று சொல்வது வருத்தமாக உள்ளது. அவர், சிறையிலிருந்து வந்து தமிழக அரசியலில் ஈடுபடவேண்டும் என்று தே.மு.தி.க பொருளாளர் பிரமேலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
தேமுதிக சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்காக ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பொது உறுப்பினர்கள், பூத் முகவர்கள், செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் அனகை முருகேசன் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் பூத் முகவர்கள் பட்டியலை அளித்தனர். பின்னர் மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிமுகம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், ‘பொது நிகழ்வில் கலந்து கொண்ட முதல் மாவட்டம், முதல் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதில் பெருமை அடைகிறேன். தொண்டர்கள் தான் ஆணிவேர். 7 மண்டலங்களாக பிரிக்க விஜயகாந்த் உத்தரவிட்டார். நாளைக்கு தேர்தல் வைத்தாலும் தயாராக உள்ளோம். தலைமைக் கழகத்தில் ஒரு வாரத்தில் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.
சென்னை, ஆவடி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் என 37 தொகுதியை எனது பொறுப்பில் விஜயகாந்த் வழங்கி உள்ளார்.
ஒவ்வொரு தொகுதியிலும் 5 வக்கீல்கள் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு தெருவிலும் 5 பெண்கள் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். 234 தொகுதிகளிலும் பாடுபட வேண்டும். கூட்டணி இருக்கா இல்லையா என்பதை தலைவர் முடிவு எடுப்பார். கூட்டணியில் இருப்பதால் பொறுமை காத்து கொண்டிருக்கிறோம்.
ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத தேர்தல். திமுக, அதிமுகவிற்கே முதல் தேர்தல். இதனால் யாரும் பெரிய ஆள் என நினைக்க வேண்டாம். எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தேர்தல் கணிப்பு கூறுகிறது. தேமுதிக ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. இப்போது வரை அதிமுக ஆட்சியில் இருக்க முக்கிய காரணம் தேமுதிக. பாஜக சின்னத்தை தமிழகம் முழுக்க கொண்டு சென்றவர் விஜயகாந்த். தேமுதிக ராசியான கட்சி.
6 தொகுதியில் வெற்றி பெற்றால் தான் தேமுதிக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வரும். தேர்தல் அறிக்கையை கொடுத்து புரட்சியை ஏற்படுத்தியவர் விஜயகாந்த். அவர் சொல்லிய திட்டத்தை ஆந்திராவிலும், டெல்லியிலும் கொண்டு வந்து கடைபிடிக்கின்றனர். எனக்கு இரண்டு பணி. ஒன்று விஜயகாந்த்தை காக்க வேண்டும். அவர் உருவாக்கிய கட்சியை சிறிதும் சரியாமல் காக்க வேண்டும்.
தேர்தல் கிளைமாக்சில் வர தயாராக உள்ளார். இந்த தேர்தலில் சட்டமன்றத்தில் எனது குரல் ஒலிக்க வேண்டும் என்றால் யாராலும் தடுக்க முடியாது. விஜயகாந்த் அனுமதி கொடுத்து ஆண்டவன் அருள் இருந்தால் தேர்தலில் போட்டியிடுவேன். எந்த தொகுதி என்று தெரியாது. நல்ல முடிவாக இருக்கும் என தெரிவித்தார். ஒரு பெண் என்ற முறையில் ஒரு பெண்ணாக சசிகலா விடுதலையை வரவேற்கிறேன். ஜெயலலிதாவிற்காகவே வாழ்ந்தவர் சசிகலா.
சசிகலாவுக்கு என்று தனி வாழ்க்கை கிடையாது. அவர்களால் ஆதாயம் பெற்றவர்கள் அதிகமாக உள்ளார்கள். தற்போது அவரை வேண்டாம் என்று சொல்வது மனதுக்கு கடினமாக உள்ளது. அவரது விடுதலையை வரவேற்கிறேன். அவர் விடுதலையாகி வந்து தமிழக அரசியலில் பங்கு பெற வேண்டும் என்று பெண்ணாக முழு ஆதரவு தருகிறேன்’ என்று தெரிவித்தார்.