• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம்.. அந்த வீடியோவை மட்டும் கொடுத்திடுங்க... திமுக பேரம் பேசியதாக சசிகலா தகவல்

எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம்.. அந்த வீடியோவை மட்டும் கொடுத்திடுங்க... திமுக பேரம் பேசியதாக சசிகலா தகவல்

ஜெயலலிதா - சசிகலா

ஜெயலலிதா - சசிகலா

ஜெயலலிதாவுடன் ஆரம்ப கால நட்பு, எம்.ஜி.ஆர் இறந்தபோது ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி என்று பல்வேறு விவகாரங்களை சசிகலா பகிர்ந்துள்ளார்.

  • Share this:
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில், ‘என்னுடைய வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் பிரமிப்பாக உள்ளது. என்னுடைய சொந்த ஊர் திருத்துறைப் பூண்டி. என்னுடைய குடும்பம் மிகப்பெரியது. என் அப்பாவுடன் பிறந்தவர்கள் 11 பேர். நான், அப்பா செல்லம். தெய்வ பக்தி நிறைந்த குடும்பம். முதன்முதலில் உலகத் தமிழ் மாநாட்டில்தான் ஜெயலலிதாவைப் பார்த்தேன்.. அப்போது சென்னையில் யாரும் வீடியோ கவரேஜ் செய்யவில்லை.

    பேரம் பேசிய திமுக:

    நாங்கள்தான் 200 டிவி வைத்து வீடியோ கவரேஜ் செய்து கொண்டிருந்தோம். அப்போது, மாவட்டங்களில் வீடியோ பதிவு செய்யும் பணியை அ.தி.மு.க எங்களுக்கு வழங்கியது. ஜெயலலிதா, சினிமா பின்னணியைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எங்களுடைய வீடியோ பதிவு செய்யும் முறை பிடித்திருந்தது. அப்போது கட்சியிலிருந்த துரை என்பவர் வந்து, ஜெயலலிதாவின் வீடியோவைப் பதிவு செய்யவேண்டும் என்று கேட்டார். அப்போது தெற்கு ஆற்காடு ஆட்சியராக சந்திரலேகாவும் ஜெயலலிதாவும் ஒருமுறை இணைந்து எங்கள் நிறுவனம் எடுத்த வீடியோவைப் பார்த்துள்ளனர். அப்போது, சந்திரலேகா, வீடியோ பதிவு செய்தவர் என்னுடைய நண்பர்தான் என்று தெரிவித்துள்ளார்.

    ஜெயலலிதாவுடன் சசிகலா


    அப்போது, கன்னியாகுமரியில் ஜெயலலிதா பேசிய ஏதோ ஒன்று சர்ச்சையாகியுள்ளது. அதனையடுத்து, தி.மு.க.விலிருந்து என்னை தொடர்பு கொண்டு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம். அந்த வீடியோவைத் தாருங்கள் என்று கேட்டனர். அதில், எனக்கு சந்தேகம் இருந்ததால், நான் உடனே அந்த வீடியோவை கட்சி ஆட்களிடம் கொடுத்து ஜெயலலிதாவிடம் கொடுத்துவிட்டேன்.

    அதனையடுத்து, ஜெயலலிதா என்னைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார். அதனையடுத்து, அன்று மாலையே அவரைச் சந்தித்தேன். நான் பார்த்த முதல் ஜெயலலிதா படம் ஆயிரத்தில் ஒருவன். எனக்கு பிடித்த படமும் ஆயிரத்தில் ஒருவன்தான். தொடக்கம் முதலே அவருடன் எனக்கு ஒரு நெருக்கம் இருந்தது. அவர் தனியாகதான் வீட்டில் இருந்தார். அவரை, தனிமை கொஞ்சம் பாதித்திருந்தது. நான், சென்றவுடன் அவருக்கு அந்த தனிமை குறைந்தது.

    சசிகலா


    ஜெயலலிதாவுக்கு வெளியே செல்ல வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால், சினிமா பிரபலம் காரணமாக அவரால் வெளியே செல்ல முடியாமல் இருந்தார். நாங்கள், எங்களது தொடக்க காலத்தில் யாருக்கும் தெரியாமல் முக்காடு போட்டுக் கொண்டு திருவான்மியூர் சாலையில் நடந்து செல்வோம். எம்.ஜி.ஆரைப் பார்க்கும்போது அம்முவை நல்லா பார்த்துக் கொள் என்று கூறினார்.

    அரசியல் வியூகம் வகுத்த நடராஜன்:

    எம்.ஜி.ஆரைச் சந்திப்பதற்கான அனுமதி எனக்கு இருந்தது. நான், அவரை அடிக்கடி சந்தித்துள்ளேன்.. ராமாவாரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆர் அரசிலிருந்த மூத்த அமைச்சர்கள் இருக்கும்போதே நான் எம்.ஜி.ஆரைச் சென்று சந்தித்திருக்கிறேன். அதனால், மூத்த அமைச்சர்களின் கோபத்துக்கு ஆளானேன். அப்போதைய அமைச்சர் எம்.ஆர்.வீரப்பன் கோபத்தின் காரணமாக, எனது கணவர் நடராஜனுக்கு புதுக்கோட்டைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

    தொடக்ககாலத்தில் ஜெயலலிதாவுக்கு எனது கணவர் நடராஜன் அரசியல் வியூகம் வகுத்துக் கொடுத்தார்.

    எம்.ஜி.ஆரின் மறைவுக்குபிறகு ஜெயலலிதாவை மூத்த தலைவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். அவர்கள் மிகுந்த காட்டமாக ஜெயலலிதாவை விமர்சித்தார்கள். அதனால், அரசியலிலிருந்து விலகுவதாக ஜெயலலிதா தெரிவித்தார். அமெரிக்காவில் எம்.ஜி.ஆர் சிகிச்சையில் இருந்தபோது, எங்களுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தார்கள். எம்.ஜி.ஆர் இறந்ததை யாரும் ஜெயலலிதாவுக்கு தெரிவிக்கவில்லை. நான்தான் அவருக்கு முதன்முதலில் போன் செய்து தெரிவித்தேன்.

    எம்.ஜி.ஆரின் உடல் ராமாவரம் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்தது. நான், தினகரன், ஜெயலலிதா மூவரும் அவரது உடலைப் பார்ப்பதற்கு ராமாவரம் தோட்டத்துக்கு சென்றோம். அப்போது எங்களது காரை உள்ளே அனுமதிக்கவில்லை. 15 நிமிடங்களுக்கு மேலே நாங்கள் வெளியிலேயே நிறுத்தப்பட்டிருந்தோம். அதனால், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே செல்ல தயாரானோம். அப்போதுதான், கதவைத் திறந்தனர்.

    நாங்கள் காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றோம். எங்களை வீட்டுக்குள்ளே அனுமதிக்கவில்லை. அப்போது, அங்கே ரஜினிகாந்த் நின்றுகொண்டிருந்தார். அவர், எங்களை உள்ளே அனுமதிக்குமாறு கோரினார். உடனே, உள்ளே நான், டி.டி.வி.தினகரன், ஜெயலலிதா மூவரும் சென்றோம். அப்போது, எங்களை அறைக்குள்ளே வைத்து பூட்டப்பார்த்தனர். அப்போது, தினகரன் கதவைப் பிடித்துக் கொண்டு எங்களை வெளியே வரவைத்தார். பின்னர், எம்.ஜி.ஆரின் உடல் வாகனத்தில் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆரின் உடல் வைக்கப்பட்டிருந்தது. நாங்கள், வருவதற்காக என்னுடைய கணவர் நடராஜன் அங்கே இடம் ஒதுக்கிவைத்திருந்தார். அப்போது, நான், ஜெயலலிதா, டி.டி.வி.தினகரன் மூவரும் எம்.ஜி.ஆரின் உடலின் அருகே நின்றோம். நாங்கள், அங்கே நிற்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்களை அங்கிருந்து வெளியே போகச் சென்னார்கள். ஆட்கள் வந்து என்னை பின்புறமாக அடித்தார்கள்.

    அப்போதைய சென்னை காவல் ஆணையர் எங்களுக்கு உதவியாக இருந்தார். கட்சிக்காக உழைத்த ஜெயலலிதாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்ததைப் பார்க்கும்போது, ஜெயலலிதா அரசியலில் இருக்க வேண்டும் என்று நான் முடிவு செய்தேன். எம்.ஜி.ஆரின் உடல் அருகிலேயே இரண்டு நாட்கள் நாங்கள் அங்கேயே இருந்தோம். இரண்டு நாள்களும் ஜெயலலிதா எதுவும் சாப்பிடவில்லை. அப்போது, ஒரு அமைச்சர், ஒரு மூத்த நிர்வாகி யாரும் எங்களுக்கு உதவவில்லை. ராணுவ அதிகாரிகளின் உதவியால் எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வல வண்டியில் ஏறுவதற்கு இடம் கிடைத்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அப்போது, அவரை வண்டியிலிருந்து கீழே தள்ளிவிட்டுவிட்டார்கள். ஜே.பி.ஆர் உள்ளிட்டவர்கள் ஜெயலலிதா ஆடையை கிளிக்க முயன்றார்கள். அதன்பிறகு, சென்னை காவல் ஆணையர் எங்களை அங்கிருந்து உடனே எங்களை கிளம்பச் சொன்னார். அதன்பிறகு வீட்டுக்குச் சென்றுவிட்டோம். ஜெயலலிதா, அவரது அம்மாவின் புகைப்படம் முன்பு விழுந்து அழுதார்’ என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: