சின்னம்மா மீது மரியாதை மதிப்பு எப்பொழுதும் உண்டு என்று ஓபிஎஸ் தற்போது உண்மையை கூறியதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த இரு தினங்களாக ஆஜராகி விளக்கம் அளித்தார். சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் அவரிடம் குறுக்கு விசாரணை செய்தார். அப்போது சசிகலா மீது இப்போதும் தனிப்பட்ட முறையில் மரியாதையும் அபிமானமும் உள்ளதா எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு சசிகலா மீது தனிப்பட்ட முறையில் மரியாதையும் அபிமானமும் இன்று வரை உள்ளது என ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்தார்.
ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் எந்த சதி திட்டமும் தீட்டவில்லை. ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை என்று விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்கள் சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைக்கப்படுவாரா என்ற கேள்வியை ஓ.பன்னீர்செல்வம் முன்பு முன்வைத்தனர், ‘எனக்கு தனிப்பட்ட முறையில் சின்னம்மா மீது மதிப்பும் மரியாதையும் உண்டு’ என்று அவர் பதிலளித்தார்.
இந்நிலையில் ஓபிஎஸ் கருத்துக்கு பதிலளித்துள்ள சசிகலா, “கடவுளுக்கு தெரிந்த உண்மை நேற்று அது மக்களுக்கும் தெரிந்துள்ளது. உண்மையை யாராலும் மறைக்க முடியாது. உண்மை காலதாமதமாக மக்களுக்கு தெரியலாம் ஆனால் திரையிட்டு மறைக்க முடியாது அதிமுகவில் இருந்து எந்தவித சலுகையும் வரவில்லை என்று வருத்தம் இல்லை. எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு ஜெயலலிதா தனியாகத்தான் இருந்தார் அப்போது நாங்கள் மட்டும்தான் அவரோடு இருந்தோம்.
அதிமுகவின் தொண்டர்கள்தான் ஆணிவேர் என எம்ஜிஆர் அதிமுக சட்டத்தை வகுத்துள்ளார். ஏதோ நூறுபேர் பதவியில் இருந்துகொண்டு கருத்து தெரிவிப்பதால் அந்தக் கருத்தை ஏற்க முடியாது. கிளைக் கழக நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் இந்த இயக்கத்தின் நடக்கும் அது விரைவில் நடக்கும் சின்னம்மா மீது மரியாதை மதிப்பு எப்பொழுதும் உண்டு என்று ஓபிஎஸ் தற்போது உண்மையை கூறியுள்ளார்” என்றார்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.