சிறையில் சொகுசு வசதி செய்து தர லஞ்சம் தந்ததாக கூறப்பட்ட வழக்கின் விசாரணைக்கு ஆஜராக நேற்று பெங்களூரு சென்ற
சசிகலா, அதனை தொடர்ந்து மண்டியாவில் உள்ள நிமிஷாம்பா கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதேபோல், சாமூண்டீஸ்வரி கோவிலிலும் அவர் தரிசனம் செய்தார்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு, சொகுசு வசதிகள் பெற 2 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பெங்களூரு ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிபதி லட்சுமி நாராயண்பட் உத்தரவிட்டிருந்தார்.
இதற்காக, பெங்களூரு வந்த சசிகலா விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தன்னை சந்தித்தவர்களை கட்சியில் இருந்து நீக்கியதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும், தொண்டர்கள் எழுச்சியுடன் இருப்பதே தங்களுக்கு கிடைத்த வெற்றி எனவும் கூறினார்.
இதையும் படிங்க: 5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த தமிழக செவிலியர்கள்
பின்னர், பெங்களூரு 24வது பெருநகர நீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி ஆகியோர் ஆஜராகினர். அவர்களுக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிபதி, 3 லட்சம் ரூபாய்க்கான பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்து ஜாமின் பெற்றுக்கொள்ள அனுமதி அளித்தார். மேலும், வழக்கு விசாரணைக்காக ஏப்ரல் 16ஆம் தேதி ஆஜராக சசிகலா, இளவரசிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறையில் இருந்து விடுதலை
இதைத்தொடர்ந்து சசிகலா, இளவரசி ஆகியோர் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நிமிஷாம்பா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதை தொடர்ந்து மைசூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அவர் நேற்றிரவு ஓய்வு எடுத்தார். இன்று காலை மைசூரில் உள்ள பிரசித்தி பெற்ற சாமூண்டீஸ்வரி கோவிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.