அரசுப் பள்ளிகளுக்கு பருப்பு சப்ளை செய்யும் நிறுவனத்தின் அதிபர் குமாரசாமிக்கு பழைய நோட்டுகளில் 237 கோடி ரூபாயை சசிகலா கடன் தந்ததாக உயர்நீதிமன்றத்தில் வருமானவரித்துறை தாக்கல் செய்த ஆவணங்களில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி எந்தெந்த சொத்துகளை சசிகலா வாங்கினார் என்பது தொடர்பான விபரங்களை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தாக்கல் செய்தது.
இதில், கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்ட போது, அன்று முதல் டிசம்பர் 30ஆம் தேதி வரை தம்மிடம் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி ஏராளமான அசையா சொத்துகளை வாங்கியதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி, அங்கன்வாடி மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் சத்துணவு முட்டை, சத்து மாவு, பருப்பு ஆகியவற்றை வினியோகம் செய்து வரும் திருச்செங்கோடு கிறிஸ்டி பிரைடு கிராம் நிறுவன அதிபர் குமாரசாமிக்கு பழைய நோட்டுகளில் 237 கோடி ரூபாயை சசிகலா கடன் கொடுத்துள்ளார்.
அதற்கு ஆண்டுக்கு 6 சதவீத வட்டியுடன் 237 கோடிக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தர ஒப்புக்கொண்டதாக குமாரசாமி தெரிவித்ததாகவும் வருமான வரித்துறையின் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.