Sasikala | அடக்குமுறைக்கு என்றும் அடிபணியமாட்டேன் - சசிகலா சூளுரை

சசிகலா

வாணியம்பாடியில் பேசிய சசிகலா, அடக்குமுறைக்கு நான் என்றும் அடிபணிய மாட்டேன் என்று  தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சொத்துகுவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு காலம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைச்சாலையிலிருந்து சசிகலா ஜனவரி 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அதன்பிறகு, கொரோனா பாதிப்பின் காரணமாக மருத்துவமனை சிகிச்சையிலும் பெங்களூரு சொகுசு பங்களாவில் தனிமைப்படுத்தப்பட்டும் இருந்தார் சசிகலா. இந்தநிலையில், இன்று காலை 7.45 மணிக்கு பெங்களூரு சொகுசு விடுதியிலிருந்து சசிகலா தமிழகம் புறப்பட்டார். அ.தி.மு.கவின் கொடியைக் கட்டிக்கொண்டு சாலை வழியாக காரில் வந்த சசிகலாவுக்கு வழிநெடுக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக, அ.தி.மு.கவின் கொடியைப் பயன்படுத்தக் கூடாது என்று தமிழக அமைச்சர்கள் டி.ஜி.பியிடம் புகார் அளித்திருந்தனர். இருப்பினும், சசிகலா, தோளில் அ.தி.மு.க துண்டையும் காரில் அ.தி.மு.க கொடியையும் பயன்படுத்தி சென்னைக்கு வந்துகொண்டிருக்கிறார்.

  இந்தநிலையில், வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் காரில் இருந்தபடியே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘என் உடல் பூரண நலம் பெற வேண்டி வாழ்த்திய அத்துணை நல்ல உள்ளங்களுக்கும் முதலில் நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன். தெய்வ அருளாலும், மக்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் என் அக்கா ஜெயலலிதாவின் ஆசியாலும், நான் கொரோனாவிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன். உடல்நலம் பூரண குணமடைய உதவிய கர்நாடக அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கர்நாடக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

  ஜெயலலிதா சொன்னதுபோல, எனக்குப் பின்னாலும் அந்த அ.தி.மு.க இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் தழைத்தோங்கி இருக்கும் என்ற அந்த நல்ல எண்ணத்தை தொடர என் வாழ்நாள் முழுவதும் கழகமே குடும்பம், குடும்பமே கழகமாக எஞ்சியிருக்கும் என் வாழ்நாளை கழக முன்னேற்றத்துக்காக அர்பணிப்பேன். ஜெயலலிதாவின் பிள்ளைகள், என்றும் எனக்கும் பிள்ளைகள்தான். கழகம் எத்தனையோ முறை சோதனைகளைச் சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டெழுந்திருக்கிறது. நமது பொது எதிரியை மீண்டும் தமிழக ஆட்சிக் கட்டிலில் அமர விடாமல் வீழ்த்த ஒற்றுமையோடு இணைந்து செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். என்னுடைய குறிக்கோள்.

  நம்முடைய அரசியல் எதிரிகளின் பிரித்தாளும் முயற்சிக்கு நாம் இடம் கொடுத்துவிடக்கூடாது என்பது ஜெயலலிதாவின் எண்ணம். அதைக் காப்பது நமது கடமை. எம்.ஜி.ஆர் கட்டிக்காத்து நம் ஜெயலலிதாவின் வழியில் வெற்றிநடையுடன் வீறுநடை போட்டுக்கொண்டிருக்கும் இந்த மாபெரும் இயக்கம் சிலரின் சொந்த விருப்புவெறுப்புகளால் சிதைந்துவிடக்கூடாது என்று உங்களுக்கெல்லாம் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

  என் வாழ்நாளில் கடைசி நிமிடம் வரை அ.இ.அ.தி.மு.க என்னும் இந்த மாபெரும் இயக்கம் வளர ஏழை மக்களின் மனதில் என்றும் குடிகொண்டிருக்கும். இந்த இயக்கம் வாழையடி வாழையாகத் தழைத்தோங்க என் இறுதி மூச்சு உள்ள வரை இந்த இயக்கத்திற்காக என்றும் உழைத்திருப்பேன்

  அம்மாவின் அன்புத்தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாய் இருந்து, வரும் தேர்தலில் வெற்றிக்கனியை ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்க உறுதியேற்க வேண்டும் எத்தனை சோதனைகள் வந்தாலும், அதை புரட்சித்தலைவியின் ஆசிகொண்டு வெற்றி பெறுவோம்.

  எம்.ஜி.ஆரின் வரிகளுக்கு ஏற்ப, அன்புக்கு நான் அடிமை தமிழ்ப் பண்புக்கு நான் அடிமை கொண்ட கொள்கைக்கு நான் அடிமை தமிழக மக்களுக்கும், என் தொண்டர்களுக்கும் நான் அடிமை ஆனால் அடக்குமுறைகளுக்கு அடி பணிய மாட்டேன்,

  புரட்சித்தலைவர் நாமம் வாழ்க.. புரட்சித்தலைவி நாமம் வாழ்க வாழ்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் வளர்க தமிழகம்...’ என்று தெரிவித்தார்.

  தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தொண்டர்கள் என்னைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன். என்னுடைய செயல்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள்’ என்று தெரிவித்தார். ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது தொடர்பான கேள்விக்கு இதையெல்லாம் தமிழக அரசு ஏன் செய்கிறது என்று தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும்’ என்று பதிலளித்தார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: