கோவை மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்களை காவல்துறை நேர்மையாக விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வி.கே.சசிகலா கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவையில் ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக ப்ளஸ் டூ மாணவி தூக்கிட்டு தற்கொலை தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியர் மற்றும் பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக வி.கே. சசிகலா வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “ கோவை உக்கடத்தை சேர்ந்த 17வயது பள்ளி மாணவி, தனியார் பள்ளி ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு மனவேதனையடைந்து தற்கொலை செய்துக்கொண்ட செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.
மாணவியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மாணவியின் தற்கொலைக்கு காரணமாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் காவல்துறை நேர்மையாக விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்வி கூடங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் கல்வி நிறுவனங்களுக்கு இருக்கிறது. இதை சரியாக கடைபிடிக்காமல் போனால் மாணவ, மாணவியர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும். கல்வி கூடங்கள் மட்டுமல்ல, பெண்கள் வேலை பார்க்கும் அலுவலகமோ அல்லது எந்த இடமாக இருந்தாலும் இதுபோன்று பொறுப்பற்று பெண்களை அச்சுறுத்தி பாதுகாப்புக்கு ஊறு விளைக்கும் ஆட்கள் இருந்தால், சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினரோ, உடன் இருப்பவர்களோ அவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தால் தான் இதுபோன்ற தற்கொலைகள் நிகழாமல் தடுக்க முடியும்.
மாணவிகள் மற்றும் பெண்ணாக பிறந்த அனைவரும் மிகுந்த தன்னம்பிக்கையோடு தைரியமாக எத்தகைய சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு வாழவேண்டும் அப்போதுதான் எந்த சவால்களையும் முறியடித்து எதிலும் வெற்றி வாகை சூட முடியும். தவறு இழைக்கும் கல்வி நிறுவனங்களை தமிழக அரசு கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்த மாணவ மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் “ எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.