பண மதிப்பிழப்பு அறிவிப்பின் போது, பழைய ரூபாய் நோட்டுக்களைக்கொண்டு 1674 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சசிகலா தரப்பு வாங்கியது வருமான வரித்துறை விசாரணையில் புலனாகியுள்ளது.
ரூ.500 மற்றும் ரூ 1000 நோட்டுக்கள் செல்லாது என்ற பணமதிப்பிழப்பு அறிவிப்பின் போது, ஒரு சில புதிய நோட்டுக்களுக்காக பொதுமக்கள் வங்கி வாசலில் பல கிலோ மீட்டர் தொலைவு தவம் இருந்தனர்.
ஆனால், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பழைய ரூபாய் நோட்டுக்களைக்கொண்டு, 1674 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார் என்கிறது வருமானவரித்துறை.
சொத்துக்குவிப்பு வழக்கில், தற்போது பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியது ஒரு சின்ன துண்டு சீட்டுதான் என்றால் நம்ப முடிகிறதா?
1800 அதிகாரிகள்.. 187 இடங்கள்.. 2017 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி.. காலை 6 மணிக்கு தொடங்கியது சசிகலாவின் குடும்பத்திற்கு எதிரான வருமானவரித்துறை சோதனை. விசாரணை வளையத்தில் சிக்கிய சசிகலாவின் உறவினர் கிருஷ்ணப்பிரியாவின் செல்போனிலிருந்து ஒரு துண்டு சீட்டின் புகைப்படம் சிக்குகிறது. அந்த துண்டு சீட்டு குறித்த விசாரித்தபோது, சசிகலா பரோலில் வந்தபோது, அறையில் கிடந்த துண்டு சீட்டு என்றும், பணம் கொடுக்கல்-வாங்கல் குறித்த சீட்டு என்பதால், செல்போனில் போட்டோ எடுத்துவைத்துக்கொண்டு, ஆவணத்தை எரித்துவிட்டதாக கிருஷ்ணப்பிரியா வருமானவரித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். துண்டு சீட்டு விவகாரத்தில் சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் விசாரணை வளையத்தில் சிக்குகிறார்.
துண்டு சீட்டின் புகைப்படத்தை காட்டி விசாரணை நடத்திய வருமானவரித்துறை அதிகாரிகளிடம், அதில் உள்ளது தனது கையெழுத்துதான் என்பதை வழக்கறிஞர் செந்தில் ஒப்புக்கொள்கிறார்.
பணமதிப்பிழப்பு அறிவிப்பின் போது, கையில் உள்ள செல்லாத நோட்டுகளைக் கொண்டு சொத்துக்கள் வாங்க திட்டமிட்ட சசிகலா, ஆவணங்களை சரிபார்க்கும் பணியை தன்னிடம் அளித்தாக செந்தில் கூறியுள்ளார்.
தி.நகர் நிலத்தை தவிர, சென்னை, மதுரையில் வணிக அரங்குகள், காற்றலை, சர்க்கரை ஆலை, மென்பொருள் நிறுவனம் ஆகியவற்றை வாங்க ஒப்பந்த நகல்களையும் செந்தில் தயார் செய்து கொடுத்தாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது தன்னை அழைத்த சசிகலா, அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் வைத்து, சொத்து விவரங்களை துண்டு சீட்டில் எழுதச்சொன்னதாகவும், துண்டு சீட்டை என்வலப் கவரில் போட்டு வைத்துக்கொள்ளாச்சொன்னதாகவும் செந்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி, 2017-ல் பரோலில் வெளிவந்த சசிகலா, தியாகராய நகரில் உள்ள கிருஷ்ணப்ரியாவின் வீட்டில் இருந்தபோது மீண்டும் தன்னை அவர் அழைத்தாகவும் செந்தில் கூறியுள்ளார்.
ரகசிய என்வலப் கவருடன் சென்ற செந்திலிடம், அதை வாங்கிய சசிகலா, உரிய அறிவுரை செல்லிவிட்டு, ஆவணங்களை எரித்துவிடுமாறு கூறியுள்ளார்.
அதில் ஒரு துண்டு சீட்டைத்தான், கிருஷ்ணப்ரியா போட்டோ எடுத்துவைத்துக்கொண்டார். அதுதான், இந்த வழக்கில் துருப்புச்சீட்டாக அமைந்தது என்கிறார் இந்த வழக்கை விசாரித்த மூத்த ஐ.டி அதிகாரி.
விசாரணையில், தொழிலதிபர்களுடன், சசிகலா ரகசியமாக எழுதிக்கொண்ட சொத்து பரிமாற்ற ஆவணங்கள் சிக்கின. கிருஷ்ணப்ரியா, வழக்கறிஞர் செந்திலை அடுத்து, வருமானவரித்துறை சசிகலாவுடன் கூட்டாக செயல்பட்ட தொழிலதிபர்களை குறிவைத்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் சொத்துக்களின் பெயர்களில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஆனால், ரொக்கம் பெற்றுக்கொண்டதற்கான ஒப்பந்தம் மட்டும் செய்துகொண்டதை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, சென்னை பெரம்பூரில் உள்ள வணிக வளாகம், மதுரை கே.கே.நகரில் உள்ள ஒரு வணிக வளாகம், புதுவையில் உள்ள ரிசார்ட் ஆகியவற்றை பினாமி சட்டத்தின் கீழ் வருமானவரித்துறை முடக்கியது.
கோவையில் இயங்கிவரும் காகித ஆலை, காஞ்சிபுரம் ஓரகடத்தில் உள்ள சர்க்கரை ஆலை, ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஆகியவையும் வருமானவரித்துறையின் பார்வையிலிருந்து தப்பவில்லை.
தனக்கு எதிரான வருமானவரித்துறை நடைமுறைகளை தற்காலிகமாக நிறுத்திவைக்கும் வகையில், சாட்சியங்களை குறுக்குவிசாரணை செய்யவேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு தொடுத்தார். அவரது உத்தியையே சசிகலாவும் பின்பற்றி இருக்கிறார்.
கிருஷ்ணப்பிரியா, வழக்கறிஞர் செந்தில் உள்ளிட்டவர்களை குறுக்குவிசாரணை செய்ய வேண்டும் என சசிகலா தரப்பு மனுத்தாக்கல் செய்திருந்தது. ஆனால், வரி ஏய்ப்பு விசாரணை முடித்து, இறுதி நோட்டீஸ் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால், இனிமேல் சாட்சியங்களை விசாரிக்கவேண்டிய தேவை எழவில்லை என்று வருமானவரித்துறை பதில் அளித்து விட்டது. இதையேற்றுக்கொண்ட நீதிமன்றமும் சசிகலா தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கில், மேல்முறையீடு செல்ல சசிகலா தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.