சார்பட்டா பரம்பரை படத்தில் எமர்ஜென்சி காலக்கட்டம் குறித்த காட்சிகள் திமுக, அதிமுக ஆதரவாளர்கள் இடையே பெரும் விவாதப் பொருளாக மாறி உள்ளன.
பா. ரஞ்சித் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் சினிமா மற்றும் அரசியல் என இரண்டு தளத்திலும் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக 70-களில் நடக்கும் கதை என்பதால் எமர்ஜென்சி, மிசா என அன்றைய காலகட்ட அரசியல் சூழலை இயக்குனர் மிக தத்ரூபமாக பதிவு செய்திருப்பதாக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அதேசமயம் இது திமுக, அதிமுக ஆதரவாளர்கள் இடையே சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கொண்டுவந்த எமர்ஜென்சி எனும் அவசர நிலையால் ஒட்டுமொத்த இந்தியாவே பாதிக்கப்பட்ட சூழலில் அதை ஒற்றை ஆளாக அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி துணிச்சலுடன் எதிர்த்தார் என்றும் மேலும் இதற்காக ஸ்டாலின் உட்பட திமுகவை சேர்ந்த தலைவர்கள் பலரும் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும் படத்தின் பல இடங்களில் மிகவும் அழுத்தமாக காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருப்பது திமுக தரப்பினர் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: நெருக்கடி நிலை, கழகம், கலைஞர்: சார்பட்டா பரம்பரைக்கு உதயநிதி பாராட்டு!
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக இளைஞரணி தலைவரும் எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின், 70-களில் இருந்த அரசியல் நெருக்கடி நிலையையும், அதை கழகம் - கலைஞர் - கழக தலைவர் எதிர்கொண்ட விதத்தையும் கதையோடு காட்சிப்படுத்தியிருப்பது சிறப்புக்குரியது என பாராட்டியுள்ளார்.
திமுக ஆதரவு ஒருபுறமிருக்க அதே எமர்ஜென்சி காலகட்டத்தில் அன்றைய அதிமுக தலைவர் எம்ஜிஆர் அதை ஆதரித்து பாதயாத்திரை சென்றதாகவும் மேலும் அதிமுகவைச் சேர்ந்த சிலர் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கள்ளச்சாராயம் காய்ச்சுவது போன்ற முறைகேடான சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் படத்தில் காட்சிகள் இடம் பெற்றிருப்பது அதிமுக தரப்பை கொந்தளிக்கச் செய்துள்ளது.
மேலும் படிக்க: சார்பட்டா திமுகவின் பிரச்சாரப் படம்: பா. ரஞ்சித்துக்கு ஜெயக்குமார் கண்டனம்!
இப்படம் குறித்து கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எம்ஜிஆருக்கும் விளையாட்டுத் துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததுபோல் இப்படத்தின் காட்சிகள் சித்தரிக்கப்பட்டு இருப்பதாகவும் மேலும் இப்படம் முழுக்க முழுக்க திமுகவின் பிரச்சார படமாகவே எடுக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மொத்தத்தில் திரைப்படம் என்பது பொழுதுபோக்கு அம்சமாகவும் வணிக நோக்கத்திற்காகவும் மட்டுமே எடுக்கப்படாமல் கடந்தகால அரசியல் வரலாற்று பக்கங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதும், சமூக மாற்றத்திற்கான விவாதப்பொருளாக அமைவதுமான படங்கள் அண்மைக்காலமாக தமிழில் அதிகரித்து வருவது ஆரோக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.