இது தொடர்பாக சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் பெரும்பாலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் சூழலில், எளிமையாக மாவட்டங்கள் விட்டு மாவட்டங்கள் செல்ல, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
பொருளாதார பின்னடைவை சீர்செய்வதற்கான நடவடிக்கையாக பல வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அமைப்பு சாரா தொழில்கள் செயல்பட தமிழக அரசு ஏற்கெனவே அனுமதி அளித்திருப்பதால், படிப்படியாக இயல்புநிலை திரும்பி வருகிறது.
இந்நிலையில் சுய வாகனம் இல்லாத மக்கள் சிரமமின்றி தங்கள் பணியிடங்களுக்கு சென்று வரவும், அவசிய தேவைகளுக்கு வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கும் தனியார் வாகனங்களை பயன்படுத்தும் போது அதிக பொருளாதாரத்தை இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
சுய வாகனம் இல்லாமல், தினசரி வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ள பணியாளர்களும், கட்டிட தொழிலாளர்களும், மின்சார சம்பந்தமான வேலை செய்பவர்களும், பிளம்பர்களுக்கும் மொத்தத்தில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று பணிபுரியும் அனைவரும் பொது போக்குவரத்து சேவை எப்போது துவங்கப்படும் என்ற ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும், பெண்களின் பாதுகாப்பான பயணத்திற்கு பொது போக்குவரத்து அவசியம் என கருதுகிறேன்.
Also read... குரூப் 2, 4 தேர்வுகளை தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்விலும் முறைகேடு புகார் - பரபரப்பு தகவல்கள்
முகக்கவசம் கட்டாயம் அணியும் போதும், 3 அடி தொலைவுக்கு ஒருவருக்கு ஒருவர் இடைவெளியை பராமரிக்கிறபோதும், கிருமிநாசினி தெளித்து வாகனத்தை துப்புரவாக வைத்துக் கொள்ளும்போதும் தொற்று பரவும் வாய்ப்பு குறையும் என நம்புகிறேன்.
வேலைக்கு சென்றால் தான் அன்றைய தின வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியும் என்ற நிலையில் உள்ள எளிய தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் கடினமான சூழலை கருத்தில் கொண்டு குறைந்த செலவில் ஏதுவாக பயணம் மேற்கொள்ள, உரிய வழிகாட்டு நெறிமுறையுடன் பொது போக்குவரத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அனுமதியளிக்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று சரத்குமார் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.