நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் தினக்கூலி அடிப்படையில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றுகிறார் பரமேஸ்வரி. அவரது கணவரும் அதே வேலையில்தான் இருக்கிறார்.
இருவரும் திருப்பனந்தாள் பகுதியைச் சேர்ந்த வெளியூர்க்காரர்கள் என்பதால் வாடகை வீட்டில் தங்கிக் கொண்டு வேலை பார்த்தனர். ஆனால், இவர்கள் வாங்கும் குறைந்த சம்பளத்தில் வீட்டு வாடகை கொடுத்துக் கட்டுப்படியாகவில்லை. அதனால் குப்பைக் கிடங்கிலேயே ஓர் ஓரமாகத் தங்கிக்கொள்ள, பேரூராட்சி செயல் அலுவலரிடம் அனுமதி கேட்டனர்.
குப்பைக் கிடங்குக்கும் காவலர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டி இருந்ததால் இவர்களையே அங்கு குடியிருக்க அனுமதித்து குப்பைக் கிடங்கின் காவலராகப் பணிபுரியவும் செயல் அலுவலர் அனுமதித்தார். குப்பைகள் பிரிக்கும் அந்தக் கிடங்கு 'வளம் மீட்புப் பூங்கா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இங்கே குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.
வைத்தீஸ்வரன் கோயில் பகுதி விவசாய நிலங்கள் அதிகமுள்ள பகுதி. அதனால் பரமேஸ்வரிக்கும் விவசாயத்தில் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், வீட்டு வாடகைக்கே வழியில்லாத நிலையில் விவசாய நிலத்துக்கு எங்கே போவது என்று நினைத்து ஏக்கத்தோடு, ஏதாவது பயிர் சாகுபடி செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டார்.
Also read... 8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை.. அமைச்சகம் பதில் மனு..
அதைத்தொடர்ந்து அங்கே காலியாக இருந்த இடத்தை விவசாயத்துக்குப் தேர்வு செய்து அதில் பயிர்களை வளர்க்க முடிவு செய்தார். மறுநாள் வேலை முடிஞ்சு வந்ததும் பயிர்களை வளர்க்க ஏதுவாக குப்பை மேட்டின் ஒரு பகுதி நிலத்தை மண் வெட்டியால் சமன்படுத்தி பக்குவப்படுத்தினார் பரமேஸ்வரி.
அதில் என்ன சாகுபடி செய்யலாம் என யோசித்தவர் தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் சோளத்தை வாங்கி வந்து விதைத்திருக்கிறார். பணி நேரம் போக மீத நேரத்தில், அதைக் கண்ணும் கருத்துமாக நீர்விட்டுப் பராமரித்தார் பரமேஸ்வரி. இவரது ஆர்வத்தால், குப்பை மேடாகக் கிடந்த அந்த இடம் இப்போது சோளக் கொல்லையாகக் காட்சியளிக்கிறது.
தூய்மைப் பணியாளரின் இந்த விவசாய ஆர்வத்தைப் பாராட்டிய பேரூராட்சி செயல் அலுவலர் குகன், பரமேஸ்வரிக்கு மின்விசிறி ஒன்றைப் பரிசாக வழங்கி இருக்கிறார். அடுத்ததாக சோளக் கொல்லைக்குள் ஊடு பயிர் எதையாவது பயிர் செய்யும் யோசனையில் இருக்கிறார் பரமேஸ்வரி.
சோலைவனத்தைக் கூடச் சிலர் குப்பை மேட்டைப் போல வைத்திருப்பார்கள். ஆனால், குப்பைமேட்டையே சோலைவனமாக மாற்றியிருக்கிறார்கள் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் பணிபுரிந்து வரும் தம்பதியினர். இவர்களின் முயற்சியை நாமும் பாராட்டுவோம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Nagapattinam