மதுகுடிக்க மனைவி பணம் தராததால் குழந்தைகளுடன் சொந்த வீட்டுக்கே தீ வைத்த இளைஞர்!

குமார் & குடும்பத்தினர்

தன்னிடம் பணம் இல்லை என்று பழனியம்மாள் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார்,  இந்த வீட்டில் நீங்கள் எப்படி குடியிருப்பீர்கள் பார்க்கிறேன் என்று கூறி, குடிசை வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.

  • Share this:
மதுகுடிக்க பணம் தர மறுத்த மனைவி மற்றும் குழந்தைகளை தன்னுடைய வீட்டில் வைத்து குடிசைக்கு, கணவர்  தீவைத்ததால் உடமைகளை இழந்த குடும்பத்தினர் உடுக்க உடை மற்றும் உணவின்றி வீதியில் தவித்து வரும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள தொளசம்பட்டி ஊராட்சியில் சம்பளகாடு கிராமத்தில் வசித்து வருபவர் குமார். இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இந்த  நிலையில் கணவர் குமார் மது பழக்கத்திற்கு அடிமையானதோடு, வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் குமாரின் மனைவி பழனியம்மாள் செங்கல் சூளை வேலைக்கு சென்று வருகிறார். அதில், கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு மூன்று குழந்தைகளையும் படிக்க வைத்து வருகிறார்.

Also Read:  ‘தல அஜித் சாருக்கு நன்றி’: சார்பட்டா பரம்பரை பட நடிகர் நெகிழ்ச்சி!

இதனிடையே தொடர்ந்து பழனியம்மாள் சம்பாதிக்கும் சொற்ப வருவாயையும் குமார் மதுபானம் மற்றும் கஞ்சா குடிப்பதற்காக அவ்வப்போது பிடுங்கி சென்று விடுவது வாடிக்கயையாக இருந்து வந்துள்ளது.

இந்தநிலையில், மீண்டும் மது குடிக்க பணம் கேட்டு மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தி உள்ளார். தன்னிடம் பணம் இல்லை என்று பழனியம்மாள் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார்,  இந்த வீட்டில் நீங்கள் எப்படி குடியிருப்பீர்கள் பார்க்கிறேன் என்று கூறி, குடிசை வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்து வீட்டில் இருந்த பழனியம்மாளும், மூன்று குழந்தைகளும் வீட்டிலிருந்து வெளியே ஓடிவந்து, தீயை அனைக்க முற்பட்டுள்ளனர். ஆனால், அதற்குள் வீடு முழுவதும் எரிந்து சாம்பலாகியது. மேலும், வீட்டில் இருந்த துணி, அரிசி, ரேஷன்கார்டு, ஆதார்கார்டு, குழந்தைகளின் பாட புத்தகங்கள், சாமான்கள் என அனைத்து பொருட்களும் எரிந்து தீக்கிறையானது.

Also Read:  கொடைக்கானலில் கிளைமேட்லாம் நல்லா தான் இருக்கு.. ஆனாலும் புலம்பும் சுற்றுலா பயணிகள்..!

இதனால், பாதிக்கப்பட்ட பழனியம்மாள், மூன்று குழந்தைகளுடன், தொளசம்பட்டி காவல் நிலையம் சென்று நடந்த சம்பவம் குறித்து முறையிட்டார். இதனை தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சொந்த வீட்டிற்கே தீ வைத்த குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே வீடு மற்றும் உடமைகள் அனைத்தையும் இழந்து மூன்று பிள்ளைகளுடன் ஆதரவற்ற நிலையில் பழனியம்மாள் வீதியில் தவித்து வருகிறார். அதனால், வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வுகள் செய்து, உணவு, உடையின்றி தவித்துவரும் இளம்பெண் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மது குடிக்க பணம் கொடுக்க மனைவி மறுத்ததால், போதை ஆசாமி சொந்த வீட்டிற்கே தீவைத்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் கோகுலக்கண்ணன், சேலம்
Published by:Arun
First published: