சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து காலை 5 மணி அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காலை 5 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர், 5:30 மணிக்கு, 10,000 கன அடி வீதமும், 6 மணிக்கு 15,000 கன அடி யாகவும் அதிகரிக்கப்பட்டு, பின்னர் விநாடிக்கு 20,000 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.
முன்னதாக, உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு கருதி, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, திருநெல்வேலி மாவட்டம் கொடுமுடியாறு அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. திருக்குறுங்குடி களக்காடு வனப்பகுதியில் அமைந்துள்ள கொடுமுடியாறு அணை தொடர் மழையால் முழு கொள்ளளவான 52 புள்ளி இரண்டு ஐந்து அடியை எட்டியது. இதனையடுத்து சாகுபடிக்காக அணையில் இருந்து விநாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அப்பாவு அணையை திறந்து வைத்தார். மார்ச் 7-ம் தேதி வரை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இதனால் 5 ஆயிரத்து 780 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம், தற்போது 72 அடியை கடந்துள்ளது. விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்வதால், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 2 ஆயிரத்து 400 அடியாக அதிகரித்துள்ளது. 120 அடி உயரம் கொண்ட இந்த அணை முழு கொள்ளளவை எட்டியதால், பாதுகாப்பு கருதி 11 மதகுகள் வழியாக விநாடிக்கு உபரி நீர் முழுவதும் திறந்து விடப்படுகிறது. இதையொட்டி, ஆழியாறு சுற்றுவட்டாரப் பகுதி மற்றும் கரையோர மக்களக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Must Read : பள்ளி, கல்லூரிகளுக்கு சென்னை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று (நவம்பர் 9) விடுமுறை
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் குப்பநத்தம், செண்பாக தோப்பு, மிருகண்ட அணை உள்ளிட்ட 4 அணைகளும் நிரம்பியுள்ளன. இதில், சாத்தனூர் அணை நிரம்பியதால் தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு ஆயிரத்து 440 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 180 ஏரிகள் முழுமையாக நிரம்பியதால், அவற்றில் இருந்தும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mettur Dam