ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

15 ஆண்டுகாலமாக மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்... மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கும் மாணவர்கள் - சேலத்தில் அவலம்

15 ஆண்டுகாலமாக மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்... மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கும் மாணவர்கள் - சேலத்தில் அவலம்

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கும் மாணவர்கள்

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கும் மாணவர்கள்

Salem : சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில், 15 ஆண்டுகாலமாக மின்சாரம் இன்றி மக்கள் தவித்துவரும் நிலையில், மாணவர்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கும் அவலநிலை நிலவிவருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி அருகே உள்ளது டேனிஸ்பேட்டை.  இங்குள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்து வரும் இவர்களுக்கு, குடும்ப அட்டை, ஆதார் உள்ளிட்டவைகள் இருந்தபோதும், இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.

இவர்கள் இப்பகுதிக்கு பட்டா வழங்கக் கோரி நீண்ட நெடுங் காலமாக பல்வேறு போராட்டங்கள், முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு மனு அளித்தல் என பல்வேறு வகையில் போராடி வருகின்றனர். ஆனால் இது வரை பட்டா கிடைக்கவில்லை.

இங்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சுமார் நூறு வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது முப்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் மின் இணைப்பு கிடைக்காமல் பெரும் அவதிபட்டு வருகின்றனர். குறிப்பாக பள்ளிக் குழந்தைகள் மெழுவர்த்தி வெளிச்சத்திலும், மின் இணைப்பு உள்ள அண்டை வீடுகளுக்கு சென்றும் படித்து வருகின்றனர். அதே போல் கூலி வேலைக்குச் சென்று மாலை வீடு திரும்பும் பெண்கள் மின்சாரம் இல்லாமல் மெழுவர்த்தி வெளிச்சத்தை பயன்படுத்தியே சமையல் செய்கிறார்கள்.

“மின் இணைப்பு கிடைக்காததால், பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் புகுந்துவிடுகின்றன. இருட்டாக இருப்பதால் எங்களால் சில நேரங்களில் கவணிக்கமுடியாமல் போகிறது, என்னை ஒரு முறை பூராண் கடித்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டது” என்று கூறும் அப்பகுதியைச் சார்ந்த இல்லத்தரசி சங்கீதா, தன் மகன் அருகில் ஒரு முறை பாம்பு நெருங்கிவிட்ட நிலையில் நல்வாய்ப்பாக என் மகனை தீண்டுவதற்கு முன்பாக கண்டறிந்து அகற்றி விட்டோம் என்கிறார்.

சிறுவயது முதலே மின் விளக்கே இல்லாமல் படித்த அப்பகுதியைச் சார்ந்த வள்ளி, “தற்போது என் பிள்ளைகளும் மின் விளக்கு இல்லாமலே படிக்கும் நிலை உள்ளது. உலகில் எவ்வளவோ தொழில்நுட்பம் வளர்ந்த பின்னும் கூட மின்சாரம் இல்லாமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது” என்கிறார். இதனால் பிள்ளைகள் நன்றாக படிக்கவில்லை என ஆசிரியர்கள் கேட்கும் நிலை உள்ளது. சார்ஜ் போட மின்சாரம் இல்லாததால் செல்போண் கூட வாங்காமல் இருக்கிறோம் என்றும் கூறுகிறார்.

“பழங்குடி மக்களுக்கு எவ்வளவோ சலுகளைகள் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் எங்களுக்கு எந்த திட்டங்களும் முழுமையாக வந்தடைவதில்லை. குறைந்தபட்சம் பட்டாவும், மின்சாரமும் வழங்கி எங்களுக்கு முதலமைச்சர் உதவ வேண்டும்” என்கிறார் அப்பகுதியைச் சார்ந்த இளைஞர் விஜயகுமார்.

Must Read : தஞ்சாவூர் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின் - மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு

மின் இணைப்பு பெறுவதற்கு பட்டாவோ அல்லது தடையில்லாச் சான்றோ தேவை என மின் வாரிய அதிகாரிகள் கூறுவதாலேயே இவர்களுக்கு மின் இணைப்பு கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது. அதே போல் தற்போது பல்வேறு சேவைகளை பெறுவதற்கும் பட்டா அவசியமாக உள்ளதால் இந்த பகுதி மக்களுக்கு பட்டா வழங்கவும், மின் இணைப்பு வழங்கவும் அரசு விரைந்து நடைவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

Published by:Suresh V
First published:

Tags: Electricity, Salem