சேலம் மாநகராட்சியில் போட்டியிடும்
திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி
ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது உதயநிதி, சட்டமன்றத் தேர்தலிலும் இதேபோன்று உற்சாக வரவேற்பு கொடுத்தீர்கள், ஆனால் சேலம் மாவட்டம் 11 தொகுதிகளிலும் வெற்றிபெற செய்தீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 699 பதவிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அதில், சேலம் மாநகராட்சியில் 60 வார்டு உறுப்பினர்கள், நகராட்சிகளில் ஆத்தூரில் 33, நரசிங்கபுரத்தில் 18, மேட்டூர் 30, எடப்பாடி 30 வார்டுகள், இடங்கணசாலை 27, தாரமங்கலம் 27 வார்டுகள் என 165 உறுப்பினர்கள் களம் காண்கின்றனர். 60 வார்டுகளில் 30 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 60 வார்களில் 48 இடங்களில் திமுக களம் காண்கிறது.
இதேபோல சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 31 பேரூராட்சிகளில் வனவாசியில் 12 வார்டுகள், மேச்சேரி 18, பி.என்.பட்டி 18, சங்ககிரி 18, தம்மம்பட்டி 18 வார்டுகள் மற்றும் இதர 26 பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகள் என 474 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. சேலம் மாநகரில் உள்ள 60 வார்டுகளிலும் 60 மாமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த 60 மாமன்ற உறுப்பினர்களில் மேயர் துணை மேயர் மற்றும் 4 மண்டல குழு தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். இம்மாதம் 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் மார்ச் 2ஆம் தேதி பதவி ஏற்கின்றனர். அதனைத் தொடரந்து, மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.
நகராட்சியாக இருந்த சேலம் 1997ஆம் ஆண்டு, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது, திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சூடாமணி சேலம் மாநகராட்சியின் முதல் மேயராக பொறுப்பேற்றார். 2001ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சுரேஷ்குமார் வெற்றி பெற்று மேயரானார். 2006ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ரேகா பிரியதர்ஷினி, சேலத்தின் முதல் பெண் மேயராக பொறுப்பேற்றார்.
இது ஒருபுறம் இருக்க, முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான இங்கு வெற்றி பெறுவதை மிக முக்கியமானதாக அதிமுக கருதி அதற்கான பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. ஆளும் கட்சியாக இருக்குத் தங்களுக்குதான் வெற்றி என திமுகவும், ‘சேலம் தங்களது கோட்டை’ என அதிமுகவும் கூறி வருகின்றன. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேலம் வடக்கு தொகுதி தவிர மாவட்டத்தின் பிற 10 தொகுதிகளிலும் திமுக தோல்வி அடைந்தது. இவற்றை எல்லாம் மனதில் கொண்டு உதயநிதி ஸ்டாலின் சேலம் மாவட்ட மக்களை நம்பவே முடியாது என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
Must Read : LKG, UKG மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
இந்நிலையில், சேலம் மேயராக இருக்கையில் யார் அமரப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கிடையில், சேலம் மாவட்ட மேயரின் இருக்கையை தாயாரிக்கும் பணி ஒருபுறம் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.