கொரோனா ஊரடங்கு, நிதி பற்றாக்குறையால் தனியார் பள்ளிகளை மூடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்படுவதால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் கவலை கொண்டுள்ளனர்.
கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா நோய்தொற்று ஏற்பட்டு அனைத்து பள்ளிகளும் செயல்படாமல் உள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகள் தங்களது பள்ளியில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு சம்பளத்தை தர முடியாமல் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் பள்ளியை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே அத்வைத ஆசிரமம் சாலையில் இயங்கி வந்த விநாயகா வித்யாலயா என்ற தனியார் பள்ளி தொடர்ந்து இயங்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் அனுப்பியுள்ள அந்த குறுஞ்செய்தியில், பள்ளி மாணவர்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தி மாணவர்களின் டி.சி மற்றும் சான்றிதழ்களை பெற்று, 2021-2022 ஆம் ஆண்டு வேறு பள்ளியில் உங்களது குழந்தைகளை சேர்த்துக் கொள்ளலாம் என்று தகவல் அனுப்பியுள்ளனர்.
இதனை அடுத்து இன்று காலை முதல் ஒவ்வொரு பெற்றோராக சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள விநாயக வித்யாலயா பள்ளிக்கு வந்து அங்கு உள்ள காவலாளியிடம் இது குறித்து விளக்கம் கேட்டு வந்தனர். அவர் சரியாக பதில் தெரிவிக்காத நிலையில் தொடர்ந்து பள்ளி முதல்வருக்கு தொலைபேசி மூலமாக அழைப்புகளை விடுத்தனர். ஆனால் அவர் அழைப்புகளை ஏற்க வில்லை.
இதனால் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியின் முன்பாக கூடினர். தங்கள் குழந்தைகளின் கல்வி கனவுகள் கேள்விக்குறியாகி உள்ளது. இதுதொடர்பாக பள்ளியின் தலைமை நிர்வாகிகள் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
மேலும் தங்களால் மாற்று பள்ளியில் தற்போது எங்கள் குழந்தைகளை சேர்த்து படிக்க வைப்பது மிகவும் சிரமமான காரியம். தற்போது நோய்த்தொற்று காலத்தில் தங்களின் வாழ்க்கையை நடத்துவதே மிகப்பெரிய சவாலாக உள்ள நிலையில், இந்த பள்ளியில் இருந்து எங்களுக்கு வந்த இந்த குறுஞ்செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.
குறிப்பாக தற்போது பதினொன்றாம் வகுப்பு முடித்த எங்கள் குழந்தைகளை, பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்க எந்த பள்ளியில் அனுமதி கொடுப்பார்கள் என தெரியவில்லை, எந்தப் பள்ளியில் படிக்க வைப்பது என புரியவில்லை, உடனடியாக மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காரணங்களால் பலர் பள்ளிக் கட்டணங்களை செலுத்தவில்லை. இதனால் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பது பெரும் சிரமாக உள்ளது. எனவே தொடர்ந்து பள்ளி இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பள்ளியில் பணியாற்றும் ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, Lockdown, Private schools, Salem