ஆதரவற்றவர்கள், ஏழைகளுக்காக வாழைப்பழத் தாரை பேருந்து நிறுத்தத்தில் தொங்கவிட்டு செல்லும் மனிதநேயர்!

சேலம்

சேலத்தில் மனித நேயர் ஒருவர் ஆதரவற்றோர், ஏழைகளுக்காக வாழைப்பழத் தாரை அவ்வப்போது பேருந்து நிறுத்தத்தில் தொங்கவிட்டு செல்லும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
கொரோனா ஊரடங்கு கடந்த 10ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு படிப்படியாக கடுமையாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்
ஆதரவற்றோர் பலர் தெருக்களையே வீடுகளாக கொண்டு வசித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் இவர்களுக்கு உணவு கிடைப்பதில் சிரமம் உள்ளது.

அதே போல் அன்றாட கூலித்தொழிலாளர்கள் பலரும் வேலை இழந்துள்ளதால், உணவுக்காக சிரமப்பட்டு வருகின்றனர். அவ்வாறு தவித்து வரும் மக்களுக்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உணவு உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சேலத்திலும் அடையாளம் தெரியாத மனித நேயர் ஒருவர், ஆதரவற்றோர், ஏழைகளுக்காக வாழைப்பழத் தாரை அவ்வப்போது பேருந்து நிறுத்தத்தில் தொங்கவிட்டு செல்கிறார்.

சேலம் மாநகர் அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகில் வனத்துறை அலுவலகம் எதிர்பகுதியில் கோரிமேடு, ஏற்காடு செல்லும் பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்குஅமைக்கப்பட்டுள்ள நிழற் கூடத்தில், குடும்பத்தினரால் கைவிடப்பட்ட வயதானோர் சிலர் இரவு நேரங்களில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 11-ம்தேதி காலை வாழைப்பழத் தார் ஒன்றை யாரோ அதில் தொங்கவிட்டு சென்றுள்ளனர். இதனை ஆதரவற்றோர் பயன்படுத்தும் வகையில் தாழ்வாக தொங்கவிட்டிருந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள ஆதரவற்றோரும், அவ்வழியாக பசியில் செல்வோரும் வாழைப்பழத்தை சாப்பிட்டு சென்றனர்.

இதனை தொடர்ந்து நேற்றும், அதே போல் வாழைப்பழத் தார் தொங்கவிடப்பட்டிருந்தது. தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல், செய்த இந்த மனிதநேய சேவை, சமூக வலைதளங்களில் பெரிதும் பாராட்டு பெற்று வருகிறது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Esakki Raja
First published: