சேலத்தில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்த கணவனை உருட்டு கட்டையால் மனைவி அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அத்தனூர்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் சித்தன் மகன் மணிகண்டன் (வயது 35). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பொன்னாரம்பட்டி பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான இளமதியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு தஷ்வீந்த் மற்றும் அக்ஷூதா என்கிற ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மணிகண்டன் கடந்த சில ஆண்டுகளாகவே வேலைக்கு செல்லாமல் வீட்டிலே இருந்து வந்துள்ளார், இதனிடையே குடிபோதைக்கு அடிமையான மணிகண்டன், காதல் மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமை இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த மணிகண்டன் மீண்டும் மனைவி இளமதியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார், அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மனைவி இளமதி வீட்டில் இருந்த உருட்டு கட்டையால் கணவனை சராமாரி தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்த மணிகண்டன் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரத்த வெள்ளத்தில் கிடந்த மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து காவல் நிலையத்தில் சரணடைந்த மனைவி [அரசு பள்ளி ஆசிரியர் ] இளமதியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட காதல் கணவனை உருட்டு கட்டையால் மனைவி அடித்து கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.