கொரோனா ஊரடங்கு.. கோவில் உண்டியலை தூக்கிச்சென்ற மர்மநபர்கள்

கோயில் உண்டியலில் கொள்ளை

சேலத்தில் ஊரடங்கை பயன்படுத்தி கோவில் உண்டியல் உடைத்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் ஸ்ரீ கந்தாரி மீனாட்சி மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பண்டிகை நடைபெறும் நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக பண்டிகை நடத்தப்படாமல் இருந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தொடர்கிறது. இதன்காரணமாக  கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தினசரி பூஜை மட்டுமே நடைபெற்று வந்துள்ளது. கோவில் பூசாரி மாலையில் அம்மனுக்கு பூஜைகளை செய்துவிட்டு நடையை சாத்திவிட்டு செல்வார்.

வழக்கம்போல் கோவில் பூசாரி நேற்று மாலை 6 மணியளவில் கோயில் நடையை சாத்திவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று காலை கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கோவில் நிர்வாகத்தினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர். கோவில் உண்டியலை  யாரோ தூக்கிச் சென்றுள்ளனர். அதிகாலை கோவிலுக்குள் நுழைந்த மர்மநபர்கள் 2 உண்டியலை தூக்கி சென்று 100 மீட்டர் தூரத்தில் உள்ள சாலையில் வைத்து உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர்.

இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தகவலறிந்து வந்த சேலம் டவுன் காவல் துறையினர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Ramprasath H
First published: