முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நடமாடும் அலுவலகம்.. அசத்தும் பாமக எம்.எல்.ஏ... பொதுமக்களிடையே வரவேற்பு

நடமாடும் அலுவலகம்.. அசத்தும் பாமக எம்.எல்.ஏ... பொதுமக்களிடையே வரவேற்பு

நடமாடும் எம்.எல்.ஏ. அலுவலகம்

நடமாடும் எம்.எல்.ஏ. அலுவலகம்

தமிழகத்திலேயே முதல்முறையாக நடமாடும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைக்கப்பட்டிருப்பது சேலம் மேற்கு தொகுதியில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. பாமக எம்.எல்.ஏ.வின் இந்த வித்தியாசமான முயற்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள், முன்மாதிரி முயற்சியாக நடமாடும் எம்.எல்.ஏ அலுவலகம் அமைத்து மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார். ‘உங்கள் தேவைகளை அறிய, உங்களை தேடி’ என்ற முழக்கத்துடன்  முன்னெடுத்துள்ள இந்த புதிய முயற்சிக்கு தொகுதி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்திருக்கிறது.

சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த அருள் இராமதாஸ். இவர் தனது தொகுதி முழுவதும் நடமாடும் அலுவலகம் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். அதாவது, மாருதி ஈகோ வேனுக்குள், லேப்டாப், பிரிண்டர், ஸ்கேனர் என அலுவலகத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் உருவாக்கி, வாகனத்தின் மீது எம்.எல்.ஏ வின் தொலைபேசி எண், வாட்ஸ்அப் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை எழுதி,  வாகனத்திலேயே ஒலிபெருக்கியும் அமைத்து அதை தொகுதி முழுவதும் உலாவ விட்டுள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தேடி மக்கள் வராமல், மக்களை தேடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வரும் வகையில் இந்த ஏற்பாடுகள் இருக்கின்றன. தங்கள் பகுதிக்கு வரும் எம்.எல்.ஏ.வின் நடமாடும் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களை கொடுக்கின்றனர், சேலம் மேற்கு தொகுதி மக்கள். இதனிடையே நடமாடும் அலுவலகம் மூலம் தன்னிடம் பட்டா மாற்றம் உள்ளிட்ட கோரிக்கை வைக்கும் மக்களுக்கு அந்த இடத்திலேயே கடிதம் தயாரித்து அதை பரிந்துரை செய்யவும் நடவடிக்கை எடுக்கிறார். சாக்கடை, சாலை, குடிநீர் தொடர்பான பிரச்சனைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி, குறைகளை தீர்க்க முயற்சி செய்து வருகிறார்.

தமிழகத்திலேயே முதல்முறையாக நடமாடும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைக்கப்பட்டிருப்பது சேலம் மேற்கு தொகுதியில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. பாமக எம்.எல்.ஏ.வின் இந்த வித்தியாசமான முயற்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இதையும் படிங்க: ராஜேந்திர பாலாஜி சரணடைய வேண்டும் அல்லது முன் ஜாமின் பெற வேண்டும்: நீதிமன்றம் கருத்து

தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிப்பதற்கு மட்டும் அரசியல்வாதிகள் மக்களை தேடிச் செல்வதும், தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி யாகவோ, எம்.எல்.ஏ வாகவோ ஆனபின் மக்கள் தான் தேடிச் செல்ல வேண்டும் என்ற கலாச்சாரத்தை மாற்றும் முயற்சியாக இந்த நடமாடும் அலுவலகத்தை ஏற்பாடு செய்துள்ளதாக கூறும் எம்.எல்.ஏ அருள், தினமும் காலை 6:30 மணி முதல் 10:00 மணி வரை ஒவ்வொரு பகுதிக்கு சென்று குறைகளை கேட்பதற்கும், மற்ற நேரங்களில் அரசு அறிவிக்கும் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரியபடுத்தும் பிரச்சாரத்திற்காகவும் இந்த வாகனத்தை பயன்படுத்துவதாக கூறுகிறார்.

நடமாடும் எம்.எல்.ஏ. அலுவலகம்

’கடந்த காலங்களில் எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு நேரில் சென்றால் கூட அவ்வளவு எளிதாக எம்.எல்.ஏ வை சந்திக்க முடியாது, அவ்வாறு சந்தித்து எங்கள் குறைகளை தெரிவித்தாலும் வந்து பார்க்கிறேன் என்று சொல்வார்கள், ஆனால் வருவதில்லை. இப்போது எம்.எல்.ஏ நேரடியாக வந்து குறைகளை கேட்பது எங்களுக்கு மகிழ்ச்சி. இந்த முயற்சி மிகவும் வரவேற்க தக்கது. இதே போல் எங்கள் நீண்ட நாள் கோரிக்கைகளும் நிறைவேறினால் மிகவும் மகிழ்ச்சியடைவோம் என்கின்றனர்’ சேலம் மேற்கு தொகுதி மக்கள்.

மேலும் படிக்க: பயிற்சியின்போது தலையில் துப்பாக்கி தோட்டா பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு

தமிழகத்தின் மற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் பாமக எம்.எல்.ஏ. அருள் ராமதாஸை போல், காலத்திற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும். ஓட்டுக் கேட்க வீதி வீதியாக சென்றதை போல் மக்கள் குறைகளை கேட்கவும் வீதி வீதியாக வரவேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

First published:

Tags: MLA, PMK, Salem