• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • சேலத்தில் கனமழையால் தனித் தீவான கிராமம்: தரைப்பாலம் அமைத்துத் தர கோரிக்கை!

சேலத்தில் கனமழையால் தனித் தீவான கிராமம்: தரைப்பாலம் அமைத்துத் தர கோரிக்கை!

கனமழை- தனி தீவான கிராமம்

கனமழை- தனி தீவான கிராமம்

மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்குக்கூட ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்ல வேண்டிய சூழல் இருப்பதாக கோராத்துப்பட்டி கிராம மக்கள் கூறுகின்றனர்.

 • Share this:
  சேலம் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக நீர் நிலைகளில் வெள்ள நீர் அதிகளவில் செல்கிறது.  இதனால் ஆபத்தான முறையில் ஆற்றை கடக்க வேண்டிய சூழல் நிலவுவதாகவும் தரை பாலம் அமைப்பதே நிரந்தரமான தீர்வாக அமையும் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.

  சேலம் மாவட்டம் அயோத்தியபட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏற்காடு அடிவாரப் பகுதியில் உள்ளது கோராத்துப்பட்டி ஊராட்சி. மலை அடிவாரத்தில் இருந்து, இந்த கிராமம் வழியாக திருமணி முத்தாறு செல்கிறது. ஆற்றங்கரையின் மறு கரையில்  பக்கிரிகாடு என்ற பகுதியில் சுமார் 30 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்

  இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஏரி குளம், உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி, பெரும்பாலான  நீர்வழிப் பாதைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.  குறிப்பாக திருமணிமுத்தாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.  இதனால் கிராமத்தின் குறுக்கே உள்ள ஆற்றில் சுமார் நான்கு அடி உயரத்திற்கு நீர் வேகமாகச் செல்கிறது.

  இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளான ரேஷன், மளிகை,  மருத்துவம், பள்ளி உள்ளிட்ட எந்த பணிகளுக்கும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இடுப்பு உயர தண்ணீரில் உயிர் பயத்துடன் ஆற்றை கடந்து செல்கின்றனர். சிலர் ஆற்றை கடந்து செல்கின்ற பொழுது நீரில் அடித்துச் சென்று படுகாயத்துடன் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

  இதையும் படிங்க: திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்


  இங்கு உள்ள கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனைக்கு செல்லும் போது கூட இந்த ஆற்றை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது,  உடனடியாக மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் தரைப்பாலம் கட்டி தங்களின் வாழ்க்கையை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி பெண்கள் தெரிவிக்கின்றனர்.

  ஆற்றில் நீர் அதிகம் செல்வதால் அதனை கடப்பதில் உள்ள சிரமம் குறித்து பள்ளி மாணவி நவீனா கூறுகையில், ஆற்றில் அதிக அளவில் நீர் செல்வதால் அதனை கடந்து பள்ளிக்கூடத்திற்கு செல்ல முடிவதில்லை. சில நேரங்களில் ஆற்றை கடந்து செல்லும்போது பாடப்புத்தகங்கள் நனைந்துவிடுகின்றன.  இதனால் படிப்பை தொடர முடியாத சூழல் உள்ளது.  இப்பகுதியில் இருந்து 10 பேருக்கு மேல் பள்ளிக்கு செல்கிறோம். எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் தரைப் பாலம் அமைத்து தர வேண்டும் என கோரினர்.

  மாணவி நவீனா


  நீண்டகாலமாக தேர்தலின் போது மட்டும் வரும் அரசியல் பிரமுகர்களிடம் கோரிக்கைகளை வைத்தும் இதுவரை தங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. தற்போது மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம் எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பகுதிக்கு தரைப் பாலம் அமைத்துதங்களைப் பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

  மேலும் படிக்க: காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலூர் அருகே நாளை கரையைக் கடக்கும் - பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு


   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Murugesh M
  First published: