இன்னும் 27 அமாவாசைகள் மட்டுமே
ஸ்டாலின் முதலமைச்சராக இருக்க முடியும் என்றும் மீண்டும்
அதிமுக அரசு தமிழகத்தில் அமையும் எனவும் அ
திமுக இணை ஒருங்கிணைப்பாளர்
எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது கடந்த மூன்று தினங்களாக சேலம் மாவட்ட பகுதியில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று சேலம் பனமரத்துப்பட்டி ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, சங்ககிரி, எடப்பாடி, தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். இறுதியாக இன்று இரவு தாரமங்கலம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிற விதமாக உள்ளது. தொலைக்காட்சிகளிலும் செய்தித்தாள்களிலும் கொலை, கொள்ளை, செயின் பறிப்பு தொடர்பாகவே உள்ளன. இந்த கொலை, கொள்ளை, செயின் பறிப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் திமுகவினர் தான் உள்ளனர். இதனாலேயே மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார் என விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பொங்கல் பரிசு தொகுப்பு கொடுத்ததில் 500 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர். மேலும் கண்ணுக்கு தெரியாத காற்றில் ஊழல் செய்தவர்கள், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் ஊழல் செய்துள்ளனர் என்று தெரிவித்த அவர், 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரும் போது சட்டமன்றத் தேர்தலும் வரும் என பொதுமக்கள் மத்தியில் பேசினார். இன்னும் 27 அமாவாசைகள் முடிந்தவுடன் மீண்டும் அதிமுக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதையும் படிங்க: இந்தியா சமூக நீதி நாடாக ஆக்கப்பட வேண்டும்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
இந்தியாவிலேயே ஜனநாயக முறைப்படி நடக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க தான். நாங்கள் திமுகவில் இருந்திருந்தால் அமைச்சராகி இருக்க முடியுமா? திமுகவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு பதவி இல்லை. அதிமுகவில் இருந்து சென்றவர்கள் தான் அமைச்சர்களாக உள்ளனர். ஆட்கள் பிடிக்கும் வேலையை திமுக செய்து வருகிறது. கட்சியினரை நம்பி இல்லாமல் ஏஜென்ட்களை நம்பிதான் தி.மு.க உள்ளது. வடமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் தான் திமுகவை இயக்குகின்றனர் என்றார்.
மேலும் படிக்க: நீட் தேர்வு விலக்கு பெறும் விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் மக்களை ஏமாற்றுகின்றனர் : டிடிவி தினகரன்
இந்தியாவிலேயே 525 தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு சாதனை படைத்த திமுக, வெற்றி பெற்றதும் எதையும் நிறைவேற்றவில்லை. நீட் தேர்வு தொடர்பாக முதலமைச்சர் விடுத்த சவாலை ஏற்றுக் கொண்டேன். ஆனால் இதுவரை அதற்கு முதல்வரிடம் இருந்து பதில் இல்லை. சட்டமன்றத்தில் பொதுமக்களின் குறைகள் குறித்து நாங்கள் பேசினால், திமுக அமைச்சர்கள் போதும் என பேசுவதை தடுக்கிறார்கள். பொதுமக்களின் பிரச்சனை தீருவரை போராடுவோம், குறைகளை எடுத்துரைப்போம் என்றும் தெரிநித்தார்.
செய்தியாளர்: கோகுலகண்ணன் - சேலம்இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.