எடப்பாடி அருகே வெள்ளரி வெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் இறந்தவருக்கு விவசாய கடன் வழங்கிய விவகாரம் தொடர்பாக செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் , எடப்பாடி அருகே வெள்ளரிவெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இதில் நான்காயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ‘ ஏ ’ வகுப்பு உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கத்தில் விவசாய கடன் வழங்கியதிலும் , 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் தமிழக அரசு தள்ளுபடி செய்த கடன்களிலும் முறைகேடு செய்துள்ளதாக கூறி , கூட்டுறவுத்துறை அமைச்சருக்கும் , அதிகாரிகளுக்கும் சங்க உறுப்பினர்கள் புகார்களை அனுப்பினர். இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது .
Also Read: வெல்லம் உருகுதய்யா.. விடியல் ஆட்சியிலே - ட்ரெண்டாகும் ஜெயக்குமாரின் வீடியோ
இந்த சங்கத்தில் உறுப்பினராக இருந்த வெள்ளரிவெள்ளி அருகேயுள்ள வேட்டுவப்பட்டியை சேர்ந்த ராமசாமி என்பவர் , கடந்த 2012 ம் ஆண்டு ஜனவரி 19 ம் தேதி இறந்துவிட்டார் . இந்த நிலையில் , கடந்த 2019 ம் ஆண்டு வெள்ளரிவெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகவும் , அதனை கட்டுவதற்கு நேரில் ஆஜராகவேண்டும் எனவும் கூட்டுறவுத்துறை சார்பதிவாளர் முரளிகிருஷ்ணன் , இறந்து போன ராமசாமி பெயருக்கு கடந்த மாதம் 2 ம் தேதி சம்மன் அனுப்பியுள்ளார் .
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மகன் சித்துராஜ் , கடந்த மாதம் 10 ம் தேதி கூட்டுறவு சங்கத்தில் ஆஜராகி , தன் தந்தை இறந்ததை கூறியதுடன் , இறந்தவர் பெயரில் கடன் எடுத்து முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , விசாரணை அதிகாரி முரளிகிருஷ்ணனிடம் கூறியுள்ளார் .
Also Read: பொங்கல் தொகுப்பில் பல்லி.. புகார் கூறியவர் மீது வழக்கு - மனவருத்தத்தில் தீக்குளித்த மகன் இறப்பு
இதனிடையே இந்த சங்கத்தில் 2016 மற்றும் 2021 ம் ஆண்டு , தமிழக அரசால் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாய கடன்களை முழுமையாக விசாரணை செய்து ,முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் , முறைகேடான கடன்களை வசூல்செய்ய வேண்டும் என சங்க உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர் . இதனை அடுத்து இது தொடர்பாக கூட்டுறவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின் றனர் .
இந்த நிலையில், வெள்ளரிவெள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சங்கத்தின் செயலாளர் மோகனை சஸ்பெண்ட் செய்து சேலம் மண்டல இணை பதிவாளர் ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார் . தொடர்ந்து முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.