சேலம் - சென்னை இடையிலான விமான சேவைகள் நாளை முதல் நிறுத்தம்!

சேலம் விமான நிலையம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கமலாபுரத்தில் இருந்து சென்னைக்கு தினசரி பயணிகள் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.

  • Share this:
முழு ஊரடங்கு காரணமாக சேலத்திலிருந்து சென்னைக்கு தினசரி இயக்கப்பட்டு வந்த விமான சேவை நாளை முதல் 10 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக சேலம் விமான நிலைய இயக்குனர் ரவீந்திர வர்மா அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அளவில் திணசரி 3.5 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். தமிழகத்திலும் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், எதுவும் பலன் தராததால், தற்போது இறுதி கட்ட ஆயுதமாக பல்வேறு மாநிலங்களும் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து வருகின்றன. தமிழகத்திலும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் விமான பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கமலாபுரத்தில் இருந்து சென்னைக்கு தினசரி பயணிகள் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக விமான சேவையை யாரும் பயன்படுத்தாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சேலத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் விமான சேவை நாளை முதல் 22ஆம் தேதி வரை பத்து நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக சேலம் விமான நிலைய இயக்குனர் ரவீந்திர வர்மா தெரிவித்துள்ளார்.

மேலும் அலுவலக பணிகள் தொடர்ந்து நடைபெறும் எனவும், அவசர தேவைக்காகவும் மருத்துவத் தேவைக்காகவும் மட்டும் விமான சேவை இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 
Published by:Esakki Raja
First published: